பத்தாம்-திருமுறை

6ம் தந்திரம் - 13. அபக்குவன்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்

குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்

குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்

குருடுங் குருடுங் குழிவிழு மாறே.  1 

 

 

மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி

நினைப்பின் அதனின் நிழலையுங் காணார்

வினைப்பயன் போக விளக்கியுங் கொள்ளார்

புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே.  2 

 

 

ஏயெனில் என்னென மாட்டார் பிரசைகள்

வாய்முலை பெய்ய மதுரநின் றூறிடுந்

தாய்முலை யாவ தறியார் தமருளோர்

ஊனிலை செய்யும் உருவிலி தானே.  3 

 

 

வாயொன்று சொல்லி மனமொன்று சிந்தித்து

நீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்

தீயென்றிங் குன்னைத் தெளிவன் தெளிந்தபின்

பேயென்றிங் கென்னைப் பிறர்தெளி யாரே.  4 

 

 

பஞ்சத் துரோகத்திப் பாதகர் தம்மை

யஞ்சச் சமயத்தோர் வேந்தன் அருந்தண்டம்

விஞ்சச்செய் திப்புவி வேறே விடாவிடிற்

பஞ்சத்து ளாய்புவி முற்றும்பா ழாகுமே.  5 

 

 

தவத்திடை நின்றவர் தாமுண்ணும் கன்மஞ்

சிவத்திடை நின்றது தேவர் அறியார்

தவத்திடை நின்றறி யாதவர் எல்லாம்

பவத்திடை நின்றதோர் பாடது வாமே.  6 

 

 

கன்றலுங் கருதலுங் கருமஞ் செய்தலும்

தின்றலுஞ் சுவைத்தலுந் தீமைசெய்தலும்

பின்றலும் பிறங்கலும் பெருமை கூறலும்

என்றிவை இறைபால் இயற்கை அல்லவே.  7 

 

 

விடிவ தறியார் வெளிகாண மாட்டார்

விடியில் வெளியில் விழிக்கவு மாட்டார்

கடியதோ ருண்ணிமை கட்டுமின் காண்மின்

விடியாமை காக்கும் விளக்கது வாமே.  8 

 

 

வைத்த பசுபாசம் மாற்று நெறிவைகிப்

பெத்த மறமுத்த னாகிப் பிறழ்வுற்றுத்

தத்துவ முன்னித் தலைப்படா தவ்வாறு

பித்தான சீடனுக் கீயப் பெறாதானே.  9 

 

 

மன்னும் மலம்ஐந்தும் மாற்றும் வகையோரான்

துன்னிய காமாதி தோயும் தொழில்நீங்கான்

பின்னிய பொய்யன் பிறப்பிறப் பஞ்சாதான்

அன்னிய னாவன் அசற்சீட னாமே.  10 

 

திருச்சிற்றம்பலம்