பத்தாம்-திருமுறை

6ம் தந்திரம் - 04. துறவு

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித்

துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானை

மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்

கறப்பதி காட்டும் அமரர் பிரானே.  1 

 

 

பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே

மறந்து பலஇருள் நீங்க மறைந்து

சிறந்த சிவனருள் சேர்பரு வத்துத்

துறந்த வுயிர்க்குச் சுடரொளி யாமே.  2 

 

 

அறவன் பிறப்பிலி யாரும் இலாதான்

உறைவது காட்டகம் உண்பது பிச்சை

துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப்

பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே.  3 

 

 

நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்

நெறியில் வழுவின் நெருஞ்சில் முட்பாயும்

நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு

நெறியின் நெருஞ்சில்முட் பாயகி லாவே.  4 

 

 

கேடும் கடமையுங் கேட்டுவந் தைவரும்

நாடி வளைந்தது நான்கட வேனலேன்

ஆடல் விடையுடை அண்ணல் திருவடி

கூடுந் தவஞ்செய்த கொள்கையன் தானே.  5 

 

 

உழவன் உழஉழ வானம் வழங்க

உழவன் உழவினிற் பூத்த குவளை

உழவன் உழத்தியர் கண்ணொக்கும் என்றிட்

டுழவன் அதனை யுழவொழிந் தானே.  6 

 

 

மேல்துறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன்

நாள்துறந் தார்க்கவன் நண்ப னவாவிலி

கார்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும்

பார்துறந் தார்க்கே பதஞ்செய லாமே.  7 

 

 

நாகமும் ஒன்று படம்ஐந்து நாலது

போகமுட் புற்றிற் பொருந்தி நிறைந்தது

ஆக மிரண்டும் படம்விரித் தாட்டொழிந்

தேகப் படம்செய் துடம்பிட மாமே.  8 

 

 

அகன்றார் வழிமுதல் ஆதிப் பிரானும்

இவன்றா னெனநின் றெளியனும் அல்லன்

சிவன்றாள் பலபல சீவனு மாகும்

நயன்றான் வரும்வழி நாமறி யோமே.  9 

 

 

தூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும்

ஆம்பற் குழலியின் கஞ்சுளிப் பட்டது

வேம்பேறி நோக்கினன் மீகாமன் கூரையிற்

கூம்பேறிக் கோயிலிற் பூக்கின்ற வாறே.  10 

 

திருச்சிற்றம்பலம்