பத்தாம்-திருமுறை

5ம் தந்திரம் - 11. சற்புத்திர மார்க்கம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

மேவிய சற்புத்திர மார்க்க மெய்த்தொழில்

தாவிப்ப தாஞ்சக மார்க்கம் சகத்தொழில்

ஆவ திரண்டும் அகன்று சகமார்க்கத்

தேவியோ டொன்றல் சன்மார்க்கத் தெளிவதே.  1 

 

 

பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்

ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை

நேசித்திட் டன்னமும் நீசுத்தி செய்தன்மற்

றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே.  2 

 

 

அறுகாற் பறவை அலர்தேர்ந் துழலும்

மறுகா நரையன்னந் தாமரை நீலங்

குறுகா நறுமலர் கொய்வன கண்டுஞ்

சிறுகால் அறநெறி சேரகி லாரே. 3 

 

 

அருங்கரை யாவது அவ்வடி நீழற்

பெருங்கரை யாவது பிஞ்ஞக னாணை

வருங்கரை யேகின்ற மன்னுயிர்க் கெல்லாம்

ஒருங்கரை யாயுல கேழினொத் தானே.  4 

 

 

உயர்ந்தும் பணிந்தும் முகந்துந் தழுவி

வியந்தும் அரனடிக் கேமுறை செய்மின்

பயந்தும் பிறவிப் பயனது வாகும்

பயந்து பிரிக்கிலப் பான்மைய னாமே.  5 

 

 

நின்றுதொழுவன் கிடந்தெம் பிரான்தன்னை

என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியைத்

துன்று மலர்தூவித் தொழுமின் தொழுந்தோறுஞ்

சென்று வெளிப்படுந் தேவர் பிரானே.  6 

 

 

திருமன்னுஞ் சற்புத் திரமார்க்கச் சரியை

உருமன்னி வாழும் உலகத்தீர்கேண்மின்

கருமன்னு பாசங் கைகூம்பத் தொழுது

இருமன்னு நாடோறும் இன்புற் றிருந்தே.  7 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

சிறப்புலி நாயனார்
View Details
உக்கிர பாண்டியன் பிறப்பு
View Details
அனாயா நாயனார்
View Details