பத்தாம்-திருமுறை

4ம் தந்திரம் - 10. வயிரவச் சக்கரம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

அறிந்த பிரதமையோ டாறு மறிஞ்சு

அறிந்தவச் சத்தமி மேலிவை குற்றம்

அறிந்தவை யொன்றுவிட் டொன்றுபத் தாக

அறிந்த வலமது வாக நடவே.  1 

 

 

நடந்த வயிரவன் சூல கபாலி

கடந்த பகைவனைக் கண்ணது போக்கித்

தொடர்ந்த வுயிரது வுண்ணும் பொழுது

படர்ந்த வுடல்கொடு பந்தாட லாமே.  2 

 

 

ஆமேவப் பூண்டரு ளாதி வயிரவன்

ஆமே கபாலமுஞ் சூலமுங் கைகொண்டங்

காமே தமருக பாசமுங் கையது

வாமே சிரத்தொடு வாளது கையே.  3 

 

 

கையவை யாருங் கருத்துற நோக்கிடு

மெய்யது செம்மை விளங்கு வயிரவன்

துய்யரு ளத்தில் துளங்குமெய் யுற்றதாய்ப்

பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே.  4 

 

 

பூசனை செய்யப் பொருந்தியோ ராயிரம்

பூசனை செய்ய மதுவுட னாடுமால்

பூசனை சாந்து சவாது புழுகுநெய்

பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே.  5 

 

 

வேண்டிய வாறு கலகமு மாயிடும்

வேண்டிய ஆறிணுண் மெய்யது பெற்றபின்

வேண்டிய வாறு வரும்வழி நீநட

வேண்டிய வாறது வாகுங் கருத்தே.  6 

 

திருச்சிற்றம்பலம்