பத்தாம்-திருமுறை

4ம் தந்திரம் - 09. ஏரொளிச்சக்கரம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

ஏரொளி யுள்ளெழு தாமரை நாலிதழ்

ஏரொளி விந்துவி னாலெழு நாதமாம்

ஏரொளி யக்கலை எங்கும் நிறைந்தபின்

ஏரொளிச் சக்கர மந்நடு வன்னியே.  1 

 

 

வன்னி யெழுத்தவை மாபலம் உள்ளன

வன்னி யெழுத்தவை வானுற ஓங்கின

வன்னி யெழுத்தவை மாபெருஞ் சக்கரம்

வன்னி யெழுத்திடு வாறது சொல்லுமே.  2 

 

 

சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாஞ்

சொல்லிடு மப்பதி யவ்வெழுத் தாவன

சொல்லிடு நூறொடு நாற்பத்து நாலுரு

சொல்லிடு சக்கர மாய்வரு மேலதே.  3 

 

 

மேல்வரும் விந்துவு மவ்வெழுத் தாய்விடும்

மேல்வரு நாதமும் ஓங்கும் எழுத்துடன்

மேல்வரு மப்பதி யவ்வெழுத் தேவரின்

மேல்வரு சக்கர மாய்வரு ஞாலமே.  4 

 

 

ஞாலம தாக விரிந்தது சக்கரம்

ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும்

ஞாலம தாயிடு மப்பதி யோசனை

ஞாலம தாக விரிந்த தெழுத்தே.  5 

 

 

விரிந்த எழுத்தது விந்துவும் நாதமும்

விரிந்த எழுத்தது சக்கரமாக

விரிந்த எழுத்தது மேல்வரும் பூமி

விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே.  6 

 

 

அப்பது வாக விரிந்தது சக்கரம்

அப்பினில் அப்புறம் அவ்வன லாயிடும்

அப்பினில் அப்புறம் மாருத மாயெழ

அப்பினில் அப்புறம் ஆகாசமாமே.  7 

 

 

ஆகாச அக்கர மாவது சொல்லிடில்

ஆகாச அக்கரத் துள்ளே எழுந்தவை

ஆகாச அவ்வெழுத் தாகிச் சிவானந்தம்

ஆகாச அக்கர மாவ தறிமினே.  8 

 

 

அறிந்திடுஞ் சக்கரம் ஐயஞ்சு விந்து

அறிந்திடுஞ் சக்கர நாத முதலா

அறிந்திடும் அவ்வெழுத் தப்பதி யோர்க்கும்

அறிந்திடும் அப்பக லோனிலை யாமே.  9 

 

 

அம்முதல் ஆறுமவ் வாதி எழுத்தாகும்

அம்முதல் ஆறுமவ் வம்மை எழுத்தாகும்

இம்முதல் நாலும் இருந்திடு வன்னியே

இம்முத லாகும் எழுத்தவை எல்லாம்.  10 

 

 

எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும்

எழுத்தவை யாறது வந்நடு வன்னி

எழுத்தவை யந்நடு வச்சுட ராகி

எழுத்தவை தான்முதல் அந்தமு மாமே.  11 

 

 

அந்தமும் ஈறு முதலா னவையற

அந்தமும் அப்பதி னெட்டுடன் ஆதலால்

அந்தமும் அப்பதின் மூன்றில் அமர்ந்தபின்

அந்தமும் இந்துகை யாருட மானதே.  12 

 

 

ஆவின மானவை முன்நூற் றறுபது

மாவின மப்பதி னைந்தின மாயுறு

மாவின மப்பதி னெட்டுட னாயுறு

மாவின மக்கதி ரோன்வர வந்தே.  13 

 

 

வந்திடும் ஆகாசம் ஆறது நாழிகை

வந்திடும் அக்கரம் முப்பதி ராசியும்

வந்திடு நாளது முன்னூற் றறுபதும்

வந்திடு ஆண்டு வகுத்துறை யவ்வியே.  14 

 

 

அவ்வின மூன்றுமவ் வாடது வாய்வருங்

கெவ்வின மூன்றுங் கிளர்தரு வேரதாஞ்

சவ்வின மூன்றுந் தழைத்திடுந் தண்டதாம்

இவ்வின மூன்றும் இராசிக ளெல்லாம்.  15 

 

 

இராசியுட் சக்கரம் எங்கும் நிறைந்தபின்

இராசியுட் சக்கர மென்றறி விந்துவாம்

இராசியுட் சக்கர நாதமும் ஒத்தபின்

இராசியுட் சக்கரம் நின்றிடு மாறே.  16 

 

 

நின்றிடு விந்துவென் றுள்ள எழுத்தெல்லாம்

நின்றிடு நாதமும் ஓங்கும் எழுத்துடன்

நின்றிடு மப்பதி யவ்வெழுத் தேவரில்

நின்றிடு மப்புறந் தாரகை யானதே.  17 

 

 

தாரகையாகச் சமைந்தது சக்கரந்

தாரகை மேலோர் தழைத்தது பேரொளி

தாரகை சந்திரன் நற்பக லோன்வரத்

தாரகை தாரகை தாரகை கண்டதே.  18 

 

 

கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாங்

கண்டிடு நாதமுந் தன்மேல் எழுந்திடக்

கண்டிடு வன்னிக் கொழுந்தன வொத்தபின்

கண்டிடு மப்புறங் காரொளி யானதே.  19 

 

 

காரொளி அண்டம் பொதிந்துல கெங்கும்

பாரொளி நீரொளி சாரொளி காலொளி

வானொளி ஒக்க வளர்ந்து கிடந்துபின்

நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே.  20 

 

 

நின்றது அண்டமும் நீளும் புவியெலாம்

நின்றவிவ் வண்ட நிலைபெறக் கண்டிட

நின்றவிவ் வண்டமு மூல மலமொக்கும்

நின்றவிவ் வண்டம் பலமது விந்துவே.  21 

 

 

விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடின்

விந்துவும் நாதமும் ஒக்க விரையதாம்

விந்திற் குறைந்திடு நாதம் எழுந்திடில்

விந்துவை எண்மடி கொண்டது வீசமே.  22 

 

 

வீசம் இரண்டுள நாதத் தெழுவன

வீசமும் ஒன்று விரைந்திடு மேலுற

வீசமும் நாதமும் எழுந்துடன் ஒத்தபின்

வீசமும் விந்து விரிந்தது காணுமே.  23 

 

 

விரிந்தது விந்துவுங் கெட்டது வீசம்

விரிந்தது விந்துவும் நாதத் தளவு

விரிந்தது வுட்கட்ட எட்டெட்டு மாகில்

விரிந்தது விந்து விரையதுவாமே.  24 

 

 

விரையது விந்து விளைந்தன எல்லாம்

விரையது விந்து விளைந்த உயிரும்

விரையது விந்து விளைந்தவிஞ் ஞாலம்

விரையது விந்து விளைந்தவன் தாளே.  25 

 

 

விளைந்த எழுத்தவை விந்துவும் நாதமும்

விளைந்த எழுத்தவை சக்கரமாக

விளைந்த எழுத்தவை மெய்யினுள் நிற்கும்

விளைந்த எழுத்தவை மந்திர மாமே.  26 

 

 

மந்திரஞ் சக்கர மானவை சொல்லிடில்

தந்திரத் துள்ளெழுத் தொன்றெரி வட்டமாம்

தந்திரத் துள்ளு மிரேகையில் ஒன்றில்லை

பந்தம தாகும் பிரணவம் உன்னிடே.  27 

 

 

உன்னிட்ட வட்டத்தில் ஒத்தெழு மந்திரம்

பின்னிட்ட ரேகை பிழைப்பது தானில்லை

தன்னிடத் டெழுந்த தகைப்புறப் பின்னிற்கப்

பன்னிட்ட மந்திரம் பார்க்கலு மாமே.  28 

 

 

பார்க்கலு மாகும் பகையறு சக்கரங்

காக்கலு மாகுங் கருத்தில் தடமெங்கும்

நோக்கலு மாகும் நுணுக்கற்ற நுண்பொருள்

ஆக்கலு மாகும் அறிந்துகொள் வார்க்கே.  29 

 

 

அறிந்திடுஞ் சக்கர மாதி யெழுந்து

விரிந்திடுஞ் சக்கர மேலெழுத் தம்மை

பரிந்திடுஞ் சக்கரம் பாராங்கி நாலும்

குவிந்திடுஞ் சக்கரம் கூறலு மாமே.  30 

 

 

கூறிய சக்கரத் துள்ளெழு மந்திரம்

மாறியல் பாக அமைந்து விரிந்திடுந்

தேறிய அஞ்சுடன் சேர்ந்தெழு மாரண

மாறியல் பாக மதித்துக்கொள் வார்க்கே.  31 

 

 

மதித்திடும் அம்மையும் மாமாது மாகும்

மதித்திடும் அம்மையு மங்கனல் ஒக்கும்

மதித்தங் கெழுந்தவை காரண மாகில்

கொதித்தங் கெழுந்தவை கூடகிலாவே.  32 

 

 

கூடிய தம்பனம் மாரணம் வசியம்

ஆடியல் பாக அமைந்து செறிந்திடும்

பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார்

நேடியுள் ளாகத் தெளிந்துகொள் வார்க்கே.  33 

 

 

தெளிந்திடுஞ் சக்கர மூலத்தி னுள்ளே

அளிந்த வகாரத்தை யந்நடு வாக்கிக்

குளிர்ந்த வரனைக் கூடியுள் வைத்து

வளிந்தவை யங்கெழு நாடிய காலே.  34 

 

 

காலரை முக்கால் முழுதெனும் மந்திரம்

ஆலித் தெழுந்தமைந் தூறி எழுந்ததாய்ப்

பாலித் தெழுந்து பகையற நின்றபின்

மாலுற்ற மந்திர மாறிக்கொள் வார்க்கே.  35 

 

 

கொண்ட இம்மந்திரங் கூத்தன் எழுத்ததாய்ப்

பண்டையுள் நாவிற் பகையற விண்டபின்

மன்றுள் நிறைந்த மணிவிளக் காயிடும்

இன்றும் இதயத் தெழுந்து நமவெனே.  36 

 

திருச்சிற்றம்பலம்