பத்தாம்-திருமுறை

3ம் தந்திரம் - 14. கால சக்கரம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

மதிவட்ட மாக வரையைந்து நாடி

இதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனாற்

பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறு

மதுவிட்டுப் போமாறு மாயலுற் றேனே  1 

 

 

உற்றறி வைந்தும் உணர்ந்தறி வாறேழுங்

கற்றறி வெட்டுங் கலந்தறி வொன்பதும்

பற்றிய பத்தும் பலவகை நாழிகை 

அற்ற தறியா தழிகின்ற வாறே  2 

 

 

அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று

மொழிகின்ற முப்பத்து மூன்றென்ப தாகுங்

கழிகின்ற காலறு பத்திரண் டென்ப

தெழுகின்ற ஈரைம்ப தெண்ணற் றிருந்தே  3 

 

 

திருந்து தினமத் தினத்தினொடு நின்

றிருந்தறி நாளொன் றிரண்டெட்டு மூன்று

பொருந்திய நாளொடு புக்கறிந் தோங்கி

வருந்துத லின்றி மனைபுக லாமே  4 

 

 

மனைபுகு வீரும் மகத்திடை நாடி

எனவிரு பத்தஞ்சும் ஈரா றதனால்

தனையறிந் தேறட்டுத் தற்குறி யாறு

வினையறி யாறு விளங்கிய நாலே  5 

 

 

நாலுங் கடந்தது நால்வரும் நாலைந்து

பாலங் கடந்தது பத்துப் பதினைந்து

கோலங் கடந்த குணத்தாண்டு மூவிரண்

டாலங் கடந்ததொன் றாரறி வாரே  6 

 

 

ஆறும் இருபதுக் கையஞ்சு மூன்றுக்குந்

தேறு மிரண்டு மிருபத்தொ டாறிவை

கூறு மதியொன் றினுக்கிரு பத்தேழு

வேறு பதியங்க ணாள்விதித் தானே  7 

 

 

விதித்த இருபத்தெட் டொடுமூன் றறையாகத்

தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின்

பதித்தறி பத்தெட்டும் பாரா திகணால்

உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே  8 

 

 

முறைமுறை யாய்ந்து முயன்றில ராகில்

இறையிறை யார்க்கும் இருக்க அரிது

மறையது காரண மற்றொன்று மில்லை

பறையறை யாது பணிந்து முடியே  9 

 

 

முடிந்த தறியார் முயல்கின்ற மூர்க்கர்

இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டு

கடிந்தனன் மூளக் கதுவவல் லார்க்கு

நடந்திடும் பாரினில் நண்ணலு மாமே  10 

 

 

நண்ணு சிறுவிர னாணாக மூன்றுக்கும்

பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடுஞ்

சென்னியின் மூன்றுக்குஞ் சேரவே நின்றிடும்

உன்னி யுணர்ந்திடும் ஓவியந் தானே  11 

 

 

ஓவிய மான வுணர்வை அறிமின்கள்

பாவிக ளித்தின் பயனறி வாரில்லை

தீவினை யாமுடன் மண்டல மூன்றுக்கும்

பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே  12 

 

 

தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு

மண்டல மூன்று  மகிழ்ந்துடல் ஒத்திடுங்

கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்

பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே  13 

 

 

பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ

அணங்குட னாதித்த னாறு விரியின்

வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து

சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே  14 

 

 

சுழல்கின்ற வாறின் துணைமலர் காணான்

தழலிடைப் புக்கிடுந் தன்னு ளிலாமற்

கழல்கண்ட போம்வழி காணவல் லார்க்குக்

குழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே  15 

 

 

கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர்

சாத்திரந் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள்

பார்த்திருந் துள்ளே அனுபோக நோக்கிடில்

ஆத்தனு மாகி யமர்ந்திடு மொன்றே  16 

 

 

ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினி

நன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடுஞ்

சென்றிடு முப்பதுஞ் சேர இருந்திடிற்

குன்றிடைப் பொன்திகழ் கூத்தனு மாமே  17 

 

 

கூத்தவன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கே

ஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப்

பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற்

சாத்திடு நூறு தலைப்பெய்ய லாமே  18 

 

 

சாத்திடு நூறு தலைப்பெய்து நின்றவர்

காத்துடல் ஆயிரங் கட்டுறக் காண்பர்கள்

சேர்த்துடல் ஆயிரஞ் சேர இருந்தவர்

மூத்துடன் கோடி யுகமது வாமே  19 

 

 

உகங்கோடி கண்டும் ஒசிவற நின்று

அகங்கோடி 1கண்டு ளயலறக் காண்பர்கள்

சிவங்கோடி விட்டுச் செறிய இருந்தங்

குகங்கோடி கண்டங் குயருறு வாரே  20 

 

 

உயருறு வாருல கத்தொடுங் கூடிப்

பயனுறு வார்பலர் தாமறி யாமற்

செயலுறு வார்சிலர் சிந்தையி லாமற்

கயலுறு கண்ணியைக் காணகி லாரே  21 

 

 

காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள்

நாணகி லாதார் நயம்பேசி விடுவர்கள்

காணகி லாதார் கழிந்த பொருளெலாங்

காணகி லாமற் கழிகின்ற வாறே  22 

 

 

கழிகின்ற அப்பொருள் காணகி லாதார்

கழிகின்ற அப்பொருள் காணலு மாகுங்

கழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற்

கழியாத அப்பொருள் காணலு மாமே  23 

 

 

கண்ணன் பிறப்பிலி காணந்தி யாயுள்ளே

எண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடுந்

திண்ணென் றிருக்குஞ் சிவகதி யாநிற்கும்

நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே  24 

 

 

நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை

நாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர்

தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது

கூடவல் லார்கட்குக் கூறலு மாமே  25 

 

 

கூறும் பொருளி தகார வுகாரங்கள்

தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக்

கூறு மகாரங் குழல்வழி யோடிட

ஆறும் அமர்ந்திடும் அண்ணலு மாமே  26 

 

 

அண்ணல் இருப்பிட மாரும் அறிகிலர்

அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்

கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்

அண்ணலைக் காணில் அவனிவ வாகுமே  27 

 

 

அவனிவ நாகும் பரிசறி வாரில்லை

அவனிவ நாகும் பரிசது கேள்நீ

அவனிவ னோசை ஒளியினுள் ஒன்றிடும்

அவனிவன் வட்டம தாகிநின் றானே  28 

 

 

வட்டங்க ளேழு மலர்ந்திடும் உம்முளே

சிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர்

ஒட்டி யிருந்துள் உபாயம் உணர்ந்திடக்

கட்டி இருப்பிடங் காணலு மாகுமே  29 

 

 

காணலு மாகும் பிரமன் அரியென்று

காணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக்

காணலு மாகுஞ் சதாசிவ சத்தியுங்

காணலு மாகுங் கலந்துடன் வைத்ததே  30 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

புகழ்ச் சோழ நாயனார்
View Details
கூன் பாண்டியனது சுரத்தைத் தணித்தல்
View Details
கல்லானைக்குக் கரும்பு கொடுத்தல்
View Details