பத்தாம்-திருமுறை

2ம் தந்திரம் - 14. கரு உற்பத்தி

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்

சாக்குகின் றானவ னாதிஎம் ஆருயிர்

ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்

தாக்குகின் றான்அவன் ஆவ தறிந்தே.  1 

 

 

அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்

செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்

பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப்

பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே.  2 

 

 

இன்புறு காலத் திருவர்முன் பூறிய

துன்புறு பாசத் துயர்மனை வானுளன்

பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்

அன்புறு காலத் தமைத்தொழிந் தானே.  3 

 

 

கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்

புருடன் உடலில் பொருந்துமற் றோரார்

திருவின் கருக்குழி தேடிப் புகுந்த

துருவம் இரண்டாக ஓடி விழுந்ததே.  4 

 

 

விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி

ஒழிந்த முதல்ஐந்தும் ஈரைந்தொ டேறிப்

பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்

ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே.  5 

 

 

பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவுந்

தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்

மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங்

கூவி அவிழுங் குறிக்கொண்ட போதே.  6 

 

 

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்

மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்

நாகமும் எட்டுடன் நாலு புரவியும்

பாகன் விடானெனிற் பன்றியு மாமே.  7 

 

 

ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்

மாற எதிர்க்கில் அரியவன் றானாகும்

நேரொக்க வைக்கின் நிகர்ப்போதத் தானாகும்

பேரொத்த மைந்தனும் பேரர சாளுமே.  8 

 

 

ஏயங் கலந்த இருவர்தஞ் சாயத்துப்

பாயுங் கருவும் உருவா மெனப்பல

காயங் கலந்தது காணப் பதிந்தபின்

மாயங் கலந்த மனோலய மானதே.  9 

 

 

கர்ப்பத்துக் கேவல மாயாள் கிளைகூட்ட

நிற்குந் துரியமும் பேதித்து நினைவெழ

வற்புறு காமியம் எட்டாதல் மாயேயஞ்

சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே.  10 

 

 

என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச்

செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து

இன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும்

நன்பால் ஒருவனை நாடுகின் றேனே. 11

 

 

பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப் பகலோன்

இதஞ்செய்யு மொத்துடல் எங்கும் புகுந்து

குதஞ்செய்யும் அங்கியின் கோபந் தணிப்பான்

விதஞ்செய்யு மாறே விதித்தொழிந் தானே.  12 

 

 

ஒழிபல செய்யும் வினையுற்ற நாளே

வழிபல நீராடி வைத்தெழு வாங்கிப்

பழிபல செய்கின்ற பாசக் கருவைச்

சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே.  13 

 

 

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்

அக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும்

புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்

அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே.  14 

 

 

போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனுங்

கோசத்துள் ஆகங்கொணர்ந்த கொடைத்தொழில்

ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்து

மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே.  15 

 

 

பிண்டத்தில் உள்ளுறு பேதைப் புலன்ஐந்தும்

பிண்டத்தி னூடே பிறந்து மரித்தது

அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை

அண்டத்து நாதத் தமர்ந்திடுந் தானே.  16 

 

 

இலைபொறி யேற்றி யெனதுடல் ஈசன்

துலைப்பொறி யிற்கரு ஐந்துட னாட்டி

நிலைப்பொறி முப்பது நீர்மை கொளுவி

உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே.  17 

 

 

இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்

துன்பக் கலசம் அணைவான் ஒருவனே

ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு

வெந்தது சூளை விளைந்தது தானே.  18 

 

 

அறியீ ருடம்பினி லாகிய வாறும்

பிறியீ ரதனிற் பெருகுங் குணங்கள்

செறியீ ரவற்றினுட் சித்திகள் இட்ட

தறியவீ ரைந்தினு ளானது பிண்டமே.  19 

 

 

உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்

மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்

திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்

கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே.  20 

 

 

கேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர்

மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன்

கூட்டுகின் றான்குழம் பின்கரு வையுரு

நீட்டுநின் றாகத்து நேர்ப்பட்ட வாறே.  21 

 

 

பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்

காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும்

நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்

பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே.  22 

 

 

எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும்

கட்டிய மூன்று கரணமு மாய்விடும்

ஒட்டிய பாச உணர்வென்னுங் காயப்பை

கட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே.  23 

 

 

கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடப்

பண்ணுதல் செய்து பசுபாசம் நீங்கிட

எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை

மண்முத லாக வகுத்துவைத் தானே.  24 

 

 

அருளல்ல தில்லை அரனவன் அன்றி

அருளில்லை யாதலி னவ்வோர் உயிரைத்

தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்

வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே.  25 

 

 

வகுத்த பிறவியை மாதுநல் லாளுந்

தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்

பகுத்துணர் வாக்கிய பல்லுயிர் எல்லாம்

வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே.  26 

 

 

மாண்பது வாக வளர்கின்ற வன்னியுங்

காண்பது ஆண்பெண் அலியெனுங் கற்பனை

பூண்பது மாதா பிதாவழி போலவே

ஆம்பதி செய்தானச் சோதிதன் ஆண்மையே.  27 

 

 

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்

பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்

தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்

பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.  28 

 

 

பாய்ந்தபின் னஞ்சோடில் ஆயுளும் நூறாகும்

பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்

பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை

பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலு மாமே.  29 

 

 

பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும்

பாய்கின்ற வாயு விளைக்கின் முடமாகும்

பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்

பாய்கின்ற வாயுமா தர்க்கில்லைப்பார்க்கிலே.  30 

 

 

மாதா உதரம் மலமிகில் மந்தனாம்

மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்

மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை

மாதா உதரத்தில் வந்த குழவிக்கே.  31 

 

 

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்

குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்

குழவியும் இரண்டாம் அபான னெதிர்க்கில்

குழவி அலியாகுங் கொண்டகால் ஒக்கிலே.  32 

 

 

கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்

கொண்ட குழவியுங் கோமள மாயிடுங்

கொண்டநல் வாயு இருவர்க்குங் குழறிடில்

கொண்டதும் இல்லையாங் கோள்வளை யாட்கே.  33 

 

 

கோள்வளை உந்தியிற் கொண்ட குழவியுந்

தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்

பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்

போல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே.  34 

 

 

உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்திற்

பருவம தாகவே பாரினில் வந்திடும்

மருவி வளர்ந்திடு மாயையி னாலே

அருவம தாவதிங் காரறி வாரே.  35 

 

 

இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்

தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்

பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்

கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே.  36 

 

 

இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்

துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்

முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய

தொன்புற நாடிநின் றோதலு மாமே. 37 

 

 

குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்

அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்

இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லை

மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே.  38 

 

 

முதற்கிழங் காய்முளை யாயம் முளைப்பின்

அதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்

அதற்கது வாயின்ப மாவதுபோல

அதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே.  39 

 

 

ஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறை

ஊனே சிறுமையுள் உட்கலந் தங்குளன்

வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்

தானே அறியுந் தவத்தினி னுள்ளே.  40 

 

 

பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம்

உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டித்

திரைக்கடல் உப்புத் திரண்டது போலத்

திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே.  41 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

சாவளிகே சிவலிங்கேஸ்வர சித்தர்
View Details
வரகுண பாண்டியனின் பழியை ஒழித்தல்
View Details
வலையன் மகளை மணத்தல்
View Details