பத்தாம்-திருமுறை

2ம் தந்திரம் - 12. மறைத்தல்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை

உள்ளம்விட் டோ ரடி நீங்கா ஒருவனை

உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்

உள்ளம் அவனை உருவறி யாதே.  1 

 

 

இன்பப் பிறவி படைத்த இறைவனுந்

துன்பஞ்செய் பாசத் துயருள் அடைத்தனன்

என்பிற் கொளுவி இசைந்துறு தோற்றசை

முன்பிற் கொளுவி முடிகுவ தாமே.  2 

 

 

இறையவன் மாதவன் இன்பம் படைத்த

மறையவன் மூவரும் வந்துடன் கூடி

இறையவன் செய்த இரும்பொறி யாக்கை

மறையவன் வைத்த பரிசறி யாதே.  3 

 

 

காண்கின்ற கண்ணொளி காதல்செய் தீசனை

ஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியை

ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்

சேண்படு பொய்கைச் செயலணை யாரே.  4 

 

 

தெருளும் உலகிற்குந் தேவர்க்கும் இன்பம்

அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானுஞ்

சுருளுஞ் சுடருறு தூவெண் சுடரும்

இருளும் அறநின் றிருட்டறை யாமே.  5 

 

 

அரைக்கின் றருள்தரும் அங்கங்கள் ஓசை

உரைக்கின்ற ஆசையும் ஒன்றோடொன் றொவ்வாப்

பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க்

கரக்கின் றவைசெய்த காண்டகை யானே.  6 

 

 

ஒளித்துவைத் தேனுள் ளுறவுணர்ந் தீசனை

வெளிப்பட்டு நின்றருள் செய்திடு மீண்டே

களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை

வெளிப்பட் டிறைஞ்சின்நும் வேட்சியு மாமே.  7 

 

 

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்

சென்றங் கியங்கும் அரன்திரு மாலவன்

மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்

என்றிவ ராகி இசைந்திருந் தானே. 8 

 

 

ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தன்

இருங்கரை மேலிருந் தின்புற நாடி

வருங்கரை ஓரா வகையினிற் கங்கை

அருங்கரை பேணில் அழுக்கற லாமே. 9 

 

 

மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்

உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே

கண்ணொன்று தான்பல காணுந் தனைக்காணா

அண்ணலும் இவ்வண்ண மாகிநின் றானே.  10 

 

திருச்சிற்றம்பலம்