பத்தாம்-திருமுறை

2ம் தந்திரம் - 11. அழித்தல்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டது

அங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டது

அங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டது

அங்கியவ் வீசற்குக் கைஅம்பு தானே.  1 

 

 

இலயங்கள் மூன்றினும் ஒன்றுகற் பாந்த

நிலையன் றழிந்தமை நின்றுணர்ந் தேனால்

உலைதந்த மெல்லரி போலும் உலகம்

மலைதந்த மானிலந் தான்வெந் ததுவே.  2 

 

 

பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்

உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங்

குதஞ்செய்யும் அங்கி கொளுவியா காசம்

விதஞ்செய்யும் நெஞ்சில் வியப்பில்லை தானே.  3 

 

 

கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி

அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிரையாகி

ஒன்றின் பதந்செய்த ஓம்என்ற அப்புறக்

குண்டத்தின் மேலங்கி கோலிக் கொண்டானே.  4 

 

 

நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம்

வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாஞ்

சுத்தசங் காரந் தொழிலற்ற கேவலம்

உய்த்தசங் காரம் பரன் அருள் உண்மையே.  5 

 

 

நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்

வைத்தசங் காரமும் மாயாசங் காரமாஞ்

சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல்

உய்த்தசங் காரஞ் சிவன் அருள் உண்மையே.  6 

 

 

நித்தசங் காரம் கருவிடர் நீக்கினால்

ஒத்தசங் காரமும் உடலுயிர் நீவுதல்

 

சுத்தசங் காரம் அதீதத்துட் டோ ய்வுறல்

உய்த்தசங் காரம் பரனருள் உண்மையே

 

1வைத்தசங் காரங் கேவலம் ஆன்மாவுக்

குய்த்தசங் காரம் சிவமாகும் உண்மையே.  7 

 

 

நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றலின்

வைத்தசங் காரமும் மன்னும் அனாதியிற்

சுத்தசங் காரமுந் தோயாப் பரன்அருள்

உய்த்தசங் காரமும் நாலாம் உதிக்கிலே.  8 

 

 

பாழே முதலா எழும்பயிர் அப்பயிர்

பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா

வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்

பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே.  9 

 

 

தீயவைத் தார்மின்கள் சேரும் வினைதனை

மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு

காயம்வைத் தான்கலந் தெங்கும் நினைப்பதோர்

ஆயம்வைத் தானுணர் வாரவைத் தானே.  10 

 

திருச்சிற்றம்பலம்