பத்தாம்-திருமுறை

2ம் தந்திரம் - 02. பதிவலியில் வீரட்டம் எட்டு

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்

வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்

வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்

குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே.  1 

 

 

கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்

தலையைத் தடிந்திட்டுத் தானங்கி யிட்டு

நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்

தலையை யரிந்திட்டுச் சந்திசெய் தானே.  2 

 

 

எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியுந்

தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்

பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற

அங்குஅச் சுதனை உதிரங்கொண் டானே.  3 

 

 

எங்குங் கலந்துமென் உள்ளத் தெழுகின்ற

அங்க முதல்வன் அருமறை யோதிபாற்1

பொங்கும் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்

அங்கு விரற்குறித் தாழிசெய் தானே.  4 

 

 

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்

முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்

முப்புர மாவது மும்மல காரியம்

அப்புரம் எய்தமை யாரறி வாரே.  5 

 

 

முத்தீ கொளுவி முழங்கெரி வேள்வியுள்

அத்தி யுரியர னாவ தறிகிலர்

சத்தி கருதிய தாம்பல தேவரும்

அத்தீயின் உள்ளெழுந் தன்று கொலையே.  6 

 

 

மூலத் துவாரத்து மூளும் ஒருவனை

மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்

காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய்

ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே.  7 

 

 

இருந்த மனத்தை இசைய இருத்திப்

பொருந்தி இலிங்க வழியது போக்கித்

திருந்திய காமன் செயலழித் தங்கண்

அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே.  8 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

சமணர் கழுவேற்றம்
View Details
ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
View Details
ஸ்ரீ பல்குனி ருத்ர சித்தர்
View Details