பத்தாம்-திருமுறை

1ம் தந்திரம் - 22. கல்லாமை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

கல்லா தவரும் கருத்தறி காட்சியை

வல்லார் எனில்அருட் கண்ணான் மதித்துளோர்

கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோரும்

கல்லாதார் இன்பம் காணுகி லாரே.  1 

 

 

வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்

அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார்

எல்லா இடத்தும் உளன்எங்கள் தம் இறை

கல்லா தவர்கள் கலப்பறி யாரே.  2 

 

 

நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து

நில்லாக் குரம்பை நிலையென்று உணர்வீர்காள்

எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்

கல்லாதார் நெஞ்சத்துக் காணஒண் ணாதே.  3 

 

 

கில்லேன் வினைத்துய ராக்கும் மயலானேன்

கல்லேன் அரநெறி அறியாத் தகைமையின்

வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள்

கல்லேன் கழியநின்று ஆடவல் லேனே.  4 

 

 

நில்லாது சீவன் நிலையன்று எனஎண்ணி

வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்

கல்லா மனித்தர் கயவர் உலகினில்

பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே.  5 

 

 

விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி

கண்ணினின் உள்ளே கலந்துஅங் கிருந்தது

மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்

றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே.  6 

 

 

கணக்கறிந் தார்க்கு அன்றிக் காணஒண் ணாதது

கணக்கறிந் தார்க்கு அன்றிக் கைகூடா காட்சி

கணக்கறிந்து உண்மையைக் கண்டுஅண்ட நிற்கும்

கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே.  7 

 

 

கல்லாத மூடரைக் காணவும் ஆகாது

கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன்அன்று

கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்

கல்லாத மூடர் கருத்தறி யாரே.  8 

 

 

கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்

சுற்றமும் வீடார் துரிசுஅறார் மூடர்கள்

மற்றும் பலதிசை காணார் மதியிலோர்

கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே.  9 

 

 

ஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர்

சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்

ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற

சோதி நடத்தும் தொடர்வறி யாரே.  10

 

திருச்சிற்றம்பலம்