பத்தாம்-திருமுறை

1ம் தந்திரம் - 20. கல்வி

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

குறிப்பறிந் தேன்உடல் உயிரது கூடிச்

செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை

மறிப்பறி யாதுவந்துஉள்ளம் புகுந்தான்

கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே.  1 

 

 

கற்றறி வாளர் கருதிய காலத்துக்

கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு

கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங்

கற்றறி காட்டக் கயல்உள வாக்குமே.  2 

 

 

நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்

கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்

சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்

மற்றொன்று இலாத மணிவிளக் காமே.  3 

 

 

கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்

பல்லி யுடையார் பரம்பரிந்து உண்கின்றார்

எல்லியுன் காலையும் ஏத்தும் இறைவனை

வல்லியுள் வாதித்த காயமும் ஆமே.  4 

 

 

துணையது வாய்வரும் தூயநற் சோதி

துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம்

துணையது வாய்வரும் தூயநற் கந்தம்

துணையது வாய்வரும் தூயநற் கல்வியே.  5 

 

 

நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்

பாலொன்று பற்றினால் பண்பின் பயன்கெடும்

கோலொன்று பற்றினால் கூடா பறவைகள்

மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே.  6 

 

 

ஆய்ந்துகொள் வார்க்குஅரன் அங்கே வெளிப்படும்

தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்

ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு

வாய்ந்த மனமல்கு நூலேணி யாமே.  7 

 

 

வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்

கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை

ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும்

வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே.  8 

 

 

பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின்

முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில்

கிற்ற விரகிற் கிளரொளி வானவர்

கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே.  9 

 

 

கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்து

உடலுடை யான்பல ஊழிதொ றூழி

அடல்விடை யேறும் அமரர்கள் நாதன்

இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே.  10 

 

திருச்சிற்றம்பலம்