பத்தாம்-திருமுறை

1ம் தந்திரம் - 16. அறஞ்செய்வான் திறம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

தாமறி வார்அண்ணல் தாள்பணி வார்அவர்

தாமறி வார்அறம் தாங்கிநின் றார்அவர்

தாமறி வார்சில தத்துவர் ஆவர்கள்

தாமறி வார்க்குத் தமர்பர னாமே.  1 

 

 

யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை

யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை

யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி

யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே.  2 

 

 

அற்றுநின் றார்உண்ணும் ஊணே அறன்என்னும்

கற்றன போதம் கமழ்பவர் மானிடர்

உற்றுநின்று ஆங்கொரு கூவல் குளத்தினில்

பற்றிவந் துண்ணும் பயனறி யாரே.  3 

 

 

அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்

தழுக்கிய நாளில் தருமமும்செய்யீர்

விழித்திருந்து என்செய்வீர் வெம்மை பரந்து

விழிக்கஅன்று என்செய்வீர் ஏழைநெஞ்சீரே.  4 

 

 

தன்னை அறியாது தான்நலன் என்னாதுஇங்கு

இன்மை அறியாது இளையர்என்று ஓராது

வன்மையில் வந்திடும்கூற்றம் வருமுன்னம்

தன்மையில் நல்ல தவஞ்செய்யும் நீரே.  5 

 

 

துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை

இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை

மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்

அறந்தான் அறியும் அளவறி வாரே.  6 

 

 

தான்தவம் செய்வதாம் செய்தவத்து அவ்வழி

மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள்

ஊன் தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்

நான்தெய்வம் என்று நமன்வரு வானே.  7 

 

 

திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி

இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு

கிளைக்கும் தனக்கும் அக் கேடில் புகழோன்

விளைக்கும் தவம்அறம் மேற்றுணை யாமே.  8 

 

 

பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை

அற்றம் உரையான் அறநெறிக் கல்லது

உற்று உங்களால் ஒன்றும் ஈந்தது வேதுணை

மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே.  9 

 

திருச்சிற்றம்பலம்