பத்தாம்-திருமுறை

01 பாயிரம் - 09. மும்மூர்த்திகளின் முறைமை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

அளவில் இளமையும் அந்தமும் ஈறும்

அளவியல் காலமும் நாலும் உணரில்

தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்

அளவில் பெருமை அரியயற் காமே.  1 

 

 

ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்

ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்

சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார்

பேதித் துலகம் பிணங்குகின் றார்களே.  2 

 

 

ஈசன் இருக்கும் இருவினைககு அப்புறம்

பீசம் உலகில் பெருந்தெய்வம் ஆனது

ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்

தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே.  3 

 

 

சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த

அவைமுதல் ஆறிரண்டு ஒன்றோடு ஒன் றாகும்

அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்

சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே.  4 

 

 

பயன் அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்

அயனொடு மால்நமக்கு அன்னியம் இல்லை

நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்

வயனம் பெறுவீர் அவ் வானவ ராலே.  5 

 

 

ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்

பாலொத்த மேனி பணிந்தடி யேன் தொழ

மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ

ஞாலத்து நம்மடி நல்கிடுஎன் றானே.  6 

 

 

வானவர் என்றும் மனிதர் இவர் என்றும்

தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது

தானமர்ந்து ஓரும் தனித்தெய்வம் மற்றில்லை

ஊனமர்ந் தோரை உணர்வது தானே.  7 

 

 

சோதித்த பேரொளி மூன்று ஐந்து எனநின்ற

ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்

நீதிக்கண் ஈசன் நெடுமால் அயனென்று

பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே.  8 

 

 

பரத்திலே ஒன்றாய் உள் ளாய்ப்புற மாகி

வரத்தினுள் மாயவ னாய்அய னாகித்

தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக்

கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.  9 

 

 

தானொரு கூறு சதாசிவன் எம்மிறை

வானொரு கூறு மருவியும் அங்குளான்

கோனொரு கூறுஉடல் உள்நின்று உயிர்க்கின்ற

தானொரு கூறு சலமய னாமே. 10

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

சங்கப் பலகையளித்தல்
View Details
வன்னி மரம்ரூபவ் கிணறுரூபவ் சிவலிங்கம் சாட்சி
View Details
மாபாதகம் தீர்த்தல்
View Details