ஒன்பதாம்-திருமுறை-திருவிசைப்பா

003 உறவா கியயோ

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

உறவா கியயோ கமும்போ கமுமாய்

  உயிராளீ என்னும்என் பொன்னொருநாள்

சிறவா தவர்புரஞ் செற்ற கொற்றச்

  சிலைகொண்டு பன்றிப்பின் சென்றுநின்ற

மறவா என்னும் மணிநீர் அருவி

  மகேந்திர மாமலைமேல் உறையும்

குறவா என்னும் குணக்குன்றே என்னும்

  குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.  1 

 

 

காடாடு பல்கணம் சூழக் கேழற்

  கடும்பின் நெடும்பகற் கான்நடந்த

வேடா ! மகேந்திர வெற்பா ! என்னும்

  வினையேன் மடந்தைவிம் மாவெருவும்

சேடா என்னும் செல்வர்மூ வாயிரம்

  செழுஞ்சோதி அந்தணர் செங்கைதொழும்

கோடா என்னும் குணக்குன்றே என்னும்

  குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.  2 

 

 

கானே வருமுரண் ஏனம் எய்த

  களியார் புளினநற்கா ளாய்என்னும்

வானே தடவும் நெடுங் குடுமி

  மகேந்திர மாமலை மேலிருந்த

தேனே என்னும் தெய்வவாய் மொழியார்

  திருவாளர்மூ வாயிரவர் தெய்வக்

கோனே என்னும் குணக்குன்றே என்னும்

  குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.  3 

 

 

வெறியேறு பன்றிப் பின்சென்(று) ஒருநாள்

  விசயற்(கு) அருள்செய்த வேந்தே என்னும்

மறியேறு சாரல் மகேந் திரமா

  மலைமேல் இருந்த மருந்தே ! என்னும்

நெறியே! என்னும் நெறிநின்ற வர்கள்

  நினைக்கின்ற நீதி வேதாந்த நிலைக்

குறியே !என்னும் குணக்குன்றே ! என்னும்

  குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.  4 

 

 

செழுந்தென்றல் அன்றில்இத் திங்கள் கங்குல்

  திரைவீரை தீங்குழல் சேவின்மணி

எழுந்தின்று என்மேல் பகையாட வாடும்

  எனைநீ நலிவதென் னேஎன்னும்

அழுந்தா மகேந்திரத்(து) அந்த ரப்புட்(கு)

  அரசுக் கரசே ! அமரர்தனிக்

கொழுந்தே என்னும் குணக்குன்றே என்னும்

  குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.  5 

 

 

வண்டார் குழலுமை நங்கை முன்னே

  மகேந்திரச் சாரல் வராகத் தின்பின்

கண்டார் கவல வில்லாடி வேடர்

  கடிநா யுடன்கை வளைந்தாய் ! என்னும்

பண்டாய மலரயன் தக்கன் எச்சன்

  பகலோன் தலைபல் பசுங்கண்

கொண்டாய் என்னும் குணக்குன்றே ! என்னும்

  குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.  6 

 

 

கடுப்பாய்ப் பறைகறங்கக் கடுவெஞ் சிலையும்

  கணையும் கவணும் கைக்கொண்(டு)

உடுப்பாய் தோல்செருப்புச் சுரிகை

  வராக முன்னோடி விளியுளைப்ப

நடப்பாய் ! மகேந்திர நாத ! நாதாந்தத்(து)

  அரையா என்பார்க்கு நாதாந்தபதம்

கொடுப்பாய் என்னும் குணக்குன்றே என்னும்

  குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.  7 

 

 

சேவேந்து வெல்கொடி யானே ! என்னும்

  சிவனே ! என் சேமத்துணையே என்னும்

மாவேந்து சாரல் மகேந்தி ரத்தில்

  வளர்நா யகா ! இங்கே வாராய் என்னும்

பூவேந்தி மூவா யிரவர் தொழப்

  புகழேந்து மன்று பொலிய நின்ற

கோவே ! என்னும் குணக்குன்றே ! என்னும்

  குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.  8 

 

 

தரவார் புனம்சுனை தாழ்அருவித்

  தடம்கல் லுறையும் மடங்கல் அமர்

மரவார் பொழில்எழில் வேங்கை எங்கும்

  மழைசூழ் மகேந்திர மாமலைமேல்

சுரவா ! என்னும் சுடர்நீள் முடிமால்அயன்

  இந்திரன் முதல்தே வர்க்கெல்லாம்

குரவா என்னும் குணக்குன்றே என்னும்

  குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.  9 

 

 

திருநீ றிடாவுருத் தீண்டேன் என்னும்

  திருநீறு மெய்த்திரு முண்டத்திட்டுப்

பெருநீல கண்டன் திறங்கொண்(டு) இவள்

  பிதற்றிப் பெருந்தெரு வேதிரியும்

வருநீர் அருவி மகேந்திரப்பொன்

  மலையின் மலைமக ளுக்கருளும்

குருநீ என்னும் குணக்குன்றே ! என்னும்

  குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.  10 

 

 

உற்றாய் என்னும் உன்னையன்றி மற்றொன்(று)

  உணரேன் என்னும் உணர்வுகள் கலக்கப்

பெற்றாய ஐந்தெழுத்தும் பிதற்றிப்

  பிணிதீர வெண்ணீறிடப் பெற்றேன் என்னும்

சுற்றாய சோதி மகேந்திரம் சூழ

  மனத்திருள் வாங்கிச் சூழாத நெஞ்சில்

குற்றாய் ! என்னும் குணக்குன்றே ! என்னும்

  குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.  11 

 

 

வேறாக உள்ளத்(து) உவகை விளைத்(து)

  அவனிச் சிவலோக வேதவென்றி

மாறாத மூவாயிர வரையும் எனையும்

  மகிழ்ந்தாள வல்லாய் ! என்னும்

ஆறார் சிகர மகேந்திரத்(து) உன்

  அடியார் பிழைபொறுப்பாய் மாதோர்

கூறாய் என்னும் குணக்குன்றே என்னும்

  குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.  12 

 

திருச்சிற்றம்பலம்