ஏழாம்-திருமுறை

097 ஆதியன் ஆதிரை யன்அயன்

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : நனிபள்ளி

திருச்சிற்றம்பலம்

 

ஆதியன் ஆதிரை யன்அயன்

  மால்அறி தற்கரிய

சோதியன் சொற்பொரு ளாய்ச்சுருங்

  காமறை நான்கினையும்

ஓதியன் உம்பர்தங் கோனுல

  கத்தினுள் எவ்வுயிர்க்கும்

நாதியன் நம்பெரு மான்நண்ணும்

  ஊர்நனி பள்ளியதே.  1 

 

 

உறவிலி ஊன மிலிஉண

  ரார்புரம் மூன்றெரியச்

செறுவிலி தன்னினை வார்வினை

  யாயின தேய்ந்தழிய

அறவில கும்மரு ளான்மரு

  ளார்பொழில் வண்டறையும்

நறவிரி கொன்றையி னான்நண்ணும்

  ஊர்நனி பள்ளியதே.  2 

 

 

வானுடை யான்பெரி யான்மனத்

  தாலும்நினைப் பரியான்

ஆனிடை ஐந்தமர்ந் தான்அணு

  வாகியோர் தீயுருக்கொண்

டூனுடை இவ்வுட லம்ஒடுங்

  கிப்புகுந் தான்பரந்தான்

நானுடை மாடெம் பிரான்நண்ணும்

  ஊர்நனி பள்ளியதே.  3 

 

 

ஓடுடை யன்கல னாவுடை

  கோவண வன்உமையோர்

பாடுடை யன்பலி தேர்ந்துண்ணும்

  பண்புடை யன்பயிலக்

காடுடை யன்னிட மாமலை

  ஏழுங் கருங்கடல்சூழ்

நாடுடை நம்பெரு மான்நண்ணும்

  ஊர்நனி பள்ளியதே.  4 

 

 

பண்ணற் கரிய தொருபடை

  ஆழி தனைப்படைத்துக்

கண்ணற் கருள்புரிந் தான்கரு

  தாதவர் வேள்விஅவி

உண்ணற் கிமையவ ரையுருண்

  டோட உதைத்துகந்து

நண்ணற் கரிய பிரான்நண்ணும்

  ஊர்நனி பள்ளியதே.  5 

 

 

மல்கிய செஞ்சடை மேல்மதி

  யும்மர வும்முடனே

புல்கிய ஆரணன் எம்புனி

  தன்புரி நூல்விகிர்தன்

மெல்கிய விற்றொழி லான்விருப்

  பன்பெரும் பார்த்தனுக்கு

நல்கிய நம்பெரு மான்நண்ணும்

  ஊர்நனி பள்ளியதே.  6 

 

 

அங்கமோ ராறவை யும்அரு

  மாமறை வேள்விகளும்

எங்கும் இருந்தந் தணர்எரி

  மூன்றவை ஓம்புமிடம்

பங்கய மாமுகத் தாளுமை

  பங்கன் உறைகோயில்

செங்கயல் பாயும் வயற்றிரு

  ஊர்நனி பள்ளியதே.  7 

 

 

திங்கட் குறுந்தெரி யற்றிகழ்

  கண்ணியன் நுண்ணியனாய்

நங்கட் பிணிகளை வான்அரு

  மாமருந் தேழ்பிறப்பும்

மங்கத் திருவிர லால்அடர்த்

  தான்வல் லரக்கனையும்

நங்கட் கருளும் பிரான்நண்ணும்

  ஊர்நனி பள்ளியதே.  8 

 

 

ஏன மருப்பினொ டும்மெழில்

  ஆமையும் பூண்டுகந்து

வான மதிளர ணம்மலை

  யேசிலை யாவளைத்தான்

ஊனமில் காழிதன் னுள்ளுயர்

  ஞானசம் பந்தற்கன்று

ஞானம் அருள்புரிந் தான்நண்ணும்

  ஊர்நனி பள்ளியதே.  9 

 

 

காலமும் நாழிகை யுந்நனி

  பள்ளி மனத்தினுள்கி

கோலம தாயவ னைக்குளிர்

  நாவல ஊரன்சொன்ன

மாலை மதித்துரைப் பார்மண்

  மறந்துவா னோருலகிற்

சாலநல் லின்பமெய் தித்தவ

  லோகத் திருப்பவரே.  10 

 

திருச்சிற்றம்பலம்