ஏழாம்-திருமுறை

096 தூவாயா தொண்டுசெய்

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : ஆரூர்ப் பரவையுண்மண்டளி

திருச்சிற்றம்பலம்

 

தூவாயா தொண்டுசெய்

  வார்படு துக்கங்கள்

காவாயா கண்டுகொண்

  டார்ஐவர் காக்கிலும்

நாவாயால் உன்னையே

  நல்லன சொல்லுவேற்

காவாவென் பரவையுண்

  மண்டளி யம்மானே.  1 

 

 

பொன்னானே புலவர்க்கு

  நின்புகழ் போற்றலாம்

தன்னானே தன்னைப்

  புகழ்ந்திடுந் தற்சோதி

மின்னானே செக்கர்

  வானத் திளஞாயி

றன்னானே பரவையுண்

  மண்டளி யம்மானே.  2 

 

 

நாமாறா துன்னையே

  நல்லன சொல்லுவார்

போமாறென் புண்ணியா

  புண்ணியம் ஆனானே

பேய்மாறாப் பிணமிடு

  காடுகந் தாடுவாய்க்

காமாறென் பரவையுண்

  மண்டளி யம்மானே.  3 

 

 

நோக்குவேன் உன்னையே

  நல்லன நோக்காமைக்

காக்கின்றாய் கண்டுகொண்

  டார்ஐவர் காக்கிலும்

வாக்கென்னும் மாலைகொண்

  டுன்னை என்மனத்

தார்க்கின்றேன் பரவையுண்

  மண்டளி யம்மானே.  4 

 

 

பஞ்சேரும் மெல்லடி

  யாளையோர் பாகமாய்

நஞ்சேரும் நன்மணி

  கண்டம் உடையானே

நெஞ்சேர நின்னையே

  உள்கி நினைவாரை

அஞ்சேலென் பரவையுண்

  மண்டளி யம்மானே.  5 

 

 

அம்மானே ஆகம

  சீலர்க் கருள்நல்கும்

பெம்மானே பேரரு

  ளாளன் பிடவூரன்

தம்மானே தண்டமிழ்

  நூற்புல வாணர்க்கோர்

அம்மானே பரவையுண்

  மண்டளி யம்மானே.  6 

 

 

விண்டானே மேலையார்

  மேலையார் மேலாய

எண்டானே எழுத்தொடு

  சொற்பொருள் எல்லாமுன்

கண்டானே கண்டனைக்

  கொண்டிட்டுக் காட்டாயே

அண்டானே பரவையுண்

  மண்டளி யம்மானே.  7 

 

 

காற்றானே கார்முகில்

  போல்வதோர் கண்டத்தெங்

கூற்றானே கோல்வளை

  யாளையோர் பாகமாய்

நீற்றானே நீள்சடை

  மேல்நிறை வுள்ளதோர்

ஆற்றானே பரவையுண்

  மண்டளி யம்மானே.  8 

 

 

செடியேன்நான் செய்வினை

  நல்லன செய்யாத

கடியேன்நான் கண்டதே

  கண்டதே காமுறுங்

கொடியேன்நான் கூறுமா

  றுன்பணி கூறாத

அடியேன்நான் பரவையுண்

  மண்டளி யம்மானே.  9 

 

 

கரந்தையும் வன்னியும்

  மத்தமுங் கூவிளம்

பரந்தசீர்ப் பரவையுண்

  மண்டளி யம்மானை

நிரம்பிய ஊரன்

  உரைத்தன பத்திவை

விரும்புவார் மேலையார்

  மேலையார் மேலாரே.  10 

 

திருச்சிற்றம்பலம்