ஏழாம்-திருமுறை

081 கொன்று செய்த கொடுமை

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : கழுக்குன்றம்

திருச்சிற்றம்பலம்

 

கொன்று செய்த கொடுமை

  யாற்பல சொல்லவே

நின்ற பாவம்* வினைகள்

  தாம்பல நீங்கவே

சென்று சென்று தொழுமின்

  தேவர் பிரானிடங்

கன்றி னோடு பிடிசூழ்

  தண்கழுக் குன்றமே.  1 

 

 

இறங்கிச் சென்று தொழுமின்

  இன்னிசை பாடியே

பிறங்கு கொன்றைச் சடையன்

  எங்கள் பிரானிடம்

நிறங்கள் செய்த மணிகள்

  நித்திலங் கொண்டிழி

கறங்கு வெள்ளை அருவித்

  தண்கழுக் குன்றமே.  2 

 

 

நீள நின்று தொழுமின்

  நித்தலும் நீதியால்

ஆளும் நம்ம வினைகள்

  அல்கி அழிந்திடத்

தோளும் எட்டும் உடைய

  மாமணிச் சோதியான்

காள கண்டன் உறையுந்

  தண்கழுக் குன்றமே.  3 

 

 

வெளிறு தீரத் தொழுமின்

  வெண்பொடி ஆடியை

முளிறி லங்குமழு வாளன்

  முந்தி உறைவிடம்

பிளிறு தீரப் பெருங்கைப்

  பெய்ம்மதம் மூன்றுடைக்

களிறி னோடு பிடிசூழ்

  தண்கழுக் குன்றமே.  4 

 

 

புலைகள் தீரத் தொழுமின்

  புன்சடைப் புண்ணியன்

இலைகொள் சூலப் படையன்

  எந்தை பிரானிடம்

முலைகள் உண்டு தழுவிக்

  குட்டி யொடுமுசுக்

கலைகள் பாயும் புறவில்

  தண்கழுக் குன்றமே.  5 

 

 

மடமு டைய அடியார்

  தம்மனத் தேஉற

விடமு டைய மிடறன்

  விண்ணவர் மேலவன்

படமு டைய அரவன்

  றான்பயி லும்மிடங்

கடமு டைய புறவில்

  தண்கழுக் குன்றமே.  6 

 

 

ஊன மில்லா அடியார்

  தம்மனத் தேஉற

ஞான மூர்த்தி நட்ட

  மாடிநவி லும்மிடந்

தேனும் வண்டும் மதுவுண்

  டின்னிசை பாடியே

கான மஞ்ஞை உறையுந்

  தண்கழுக் குன்றமே.  7 

 

 

அந்த மில்லா அடியார்

  தம்மனத் தேஉற

வந்து நாளும் வணங்கி

  மாலொடு நான்முகன்

சிந்தை செய்த மலர்கள்

  நித்தலுஞ் சேரவே

கந்தம் நாறும் புறவில்

  தண்கழுக் குன்றமே.  8 

 

 

பிழைகள் தீரத் தொழுமின்

  பின்சடைப் பிஞ்ஞகன்

குழைகொள் காதன் குழகன்

  றானுறை யும்மிடம்

மழைகள் சாலக் கலித்து

  நீடுயர் வேயவை

குழைகொள் முத்தஞ் சொரியுந்

  தண்கழுக் குன்றமே.  9 

 

 

பல்லில் வெள்ளைத் தலையன்

  றான்பயி லும்மிடம்

கல்லில் வெள்ளை அருவித்

  தண்கழுக் குன்றினை

மல்லின் மல்கு திரள்தோள்

  ஊரன் வனப்பினாற்

சொல்லல் சொல்லித் தொழுவா

  ரைத்தொழு மின்களே.  10 

 

திருச்சிற்றம்பலம்