ஏழாம்-திருமுறை

078 வாழ்வாவது மாயம்மிது

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : கேதாரம்

திருச்சிற்றம்பலம்

 

வாழ்வாவது மாயம்மிது

  மண்ணாவது திண்ணம்

பாழ்போவது பிறவிக்கடல்

  பசிநோய்செய்த பறிதான்

தாழாதறஞ் செய்ம்மின்தடங்

  கண்ணான்மல ரோனுங்

கீழ்மேலுற நின்றான்றிருக்

  கேதாரமெ னீரே.  1 

 

 

பறியேசுமந் துழல்வீர்பறி

  நரிகீறுவ தறியீர்

குறிகூவிய கூற்றங்கொளும்

  நாளாலறம் உளவே

அறிவானிலும் அறிவானல

  நறுநீரொடு சோறு

கிறிபேசிநின் றிடுவார்தொழு

  கேதாரமெ னீரே.  2 

 

 

கொம்பைப்பிடித் தொருக்காலர்கள்

  இருக்கால்மலர் தூவி

நம்பன்னமை ஆள்வானென்று

  நடுநாளையும் பகலுங்

கம்பக்களிற் றினமாய்நின்று

  சுனைநீர்களைத் தூவிச்

செம்பொற்பொடி சிந்துந்திருக்

  கேதாரமெ னீரே.  3 

 

 

உழக்கேயுண்டு படைத்தீட்டிவைத்

  திழப்பார்களுஞ் சிலர்கள்

வழக்கேயெனிற் பிழைக்கேமென்பர்

  மதிமாந்திய மாந்தர்

சழக்கேபறி நிறைப்பாரொடு

  தவமாவது செயன்மின்

கிழக்கேசல மிடுவார்தொழு

  கேதாரமெ னீரே.  4 

 

 

வாளோடிய தடங்கண்ணியர்

  வலையிலழுந் தாதே

நாளோடிய நமனார்தமர்

  நணுகாமுனம் நணுகி

ஆளாயுய்ம்மின் அடிகட்கிடம்

  அதுவேயெனில் இதுவே

கீளோடர வசைத்தானிடங்

  கேதாரமெ னீரே.  5 

 

 

தளிசாலைகள் தவமாவது

  தம்மைப்பெறி லன்றே

குளியீருளங் குருக்கேத்திரங்

  கோதாவிரி குமரி

தெளியீருளஞ் சீபர்ப்பதந்

  தெற்குவடக் காகக்

கிளிவாழையொண் கனிகீறியுண்

  கேதாரமெ னீரே.  6 

 

 

பண்ணின்றமிழ் இசைபாடலின்

  பழவேய்முழ வதிரக்

கண்ணின்னொளி கனகச்சுனை

  வயிரம்மவை சொரிய

மண்ணின்றன மதவேழங்கள்

  மணிவாரிக்கொண் டெறியக்

கிண்ணென்றிசை முரலுந்திருக்

  கேதாரமெ னீரே.  7 

 

 

முளைக்கைப்பிடி முகமன்சொலி

  முதுவேய்களை இறுத்துத்

துளைக்கைக்களிற் றினமாய்நின்று

  சுனைநீர்களைத் தூவி

வளைக்கைப்பொழி மழைகூர்தர

  மயில்மான்பிணை நிலத்தைக்

கிளைக்கமணி சிந்துந்திருக்

  கேதாரமெ னீரே.  8 

 

 

பொதியேசுமந் துழல்வீர்பொதி

  அவமாவதும் அறியீர்

மதிமாந்திய வழியேசென்று

  குழிவீழ்வதும் வினையாற்

கதிசூழ்கடல் இலங்கைக்கிறை

  மலங்கவரை அடர்த்துக்

கெதிபேறுசெய் திருந்தானிடங்

  கேதாரமெ னீரே.  9 

 

 

நாவின்மிசை அரையன்னொடு

  தமிழ்ஞானசம் பந்தன்

யாவர்சிவன் அடியார்களுக்

  கடியானடித் தொண்டன்

தேவன்றிருக் கேதாரத்தை

  ஊரன்னுரை செய்த

பாவின்தமிழ் வல்லார்பர

  லோகத்திருப் பாரே.  10 

 

திருச்சிற்றம்பலம்