ஏழாம்-திருமுறை

076 பொருவ னார்புரி நூலர்

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : வாஞ்சியம்

திருச்சிற்றம்பலம்

 

பொருவ னார்புரி நூலர்

  புணர்முலை உமையவ ளோடு

மருவ னார்மரு வார்பால்

  வருவதும் இல்லைநம் அடிகள்

திருவ னார்பணிந் தேத்துந்

  திகழ்திரு வாஞ்சியத் துறையும்

ஒருவ னார்அடி யாரை

  ஊழ்வினை நலிய வொட்டாரே.  1 

 

 

தொறுவில் ஆனிள ஏறு

  துண்ணென இடிகுரல் வெருவிச்

செறுவில் வாளைகள் ஓடச்

  செங்கயல் பங்கயத் தொதுங்கக்

கறுவி லாமனத் தார்கள்

  காண்தகு வாஞ்சியத் தடிகள்

மறுவி லாதவெண் ணீறு

  பூசுதல் மன்னுமொன் றுடைத்தே.  2 

 

 

தூர்த்தர் மூவெயி லெய்து

  சுடுநுனைப் பகழிய தொன்றாற்

பார்த்த னார்திரள் தோள்மேற்

  பன்னுனைப் பகழிகள் பாய்ச்சித்

தீர்த்த மாமலர்ப் பொய்கைத்

  திகழ்திரு வாஞ்சியத் தடிகள்

சாத்து மாமணிக் கச்சங்

  கொருதலை பலதலை யுடைத்தே.  3 

 

 

சள்ளை வெள்ளையங் குருகு

  தானது வாம்எனக் கருதி

வள்ளை வெண்மலர் அஞ்சி

  மறுகியோர் வாளையின் வாயில்

துள்ளு தெள்ளுநீர்ப் பொய்கைத்

  துறைமல்கு வாஞ்சியத் தடிகள்

வெள்ளை நுண்பொடிப் பூசும்

  விகிர்தமொன் றொழிகிலர் தாமே.  4 

 

 

மைகொள் கண்டர்எண் தோளர்

  மலைமக ளுடனுறை வாழ்க்கைக்

கொய்த கூவிள மாலை

  குலவிய சடைமுடிக் குழகர்

கைதை நெய்தலங் கழனி

  கமழ்புகழ் வாஞ்சியத் தடிகள்

பைதல் வெண்பிறை யோடு

  பாம்புடன் வைப்பது பரிசே.  5 

 

 

கரந்தை கூவிள மாலை

  கடிமலர்க் கொன்றையுஞ் சூடிப்

பரந்த பாரிடஞ் சூழ

  வருவர்நம் பரமர்தம் பரிசால்

திருந்து மாடங்கள் நீடு

  திகழ்திரு வாஞ்சியத் துறையும்

மருந்த னார்அடி யாரை

  வல்வினை நலிய வொட்டாரே.  6 

 

 

அருவி பாய்தரு கழனி

  அலர்தரு குவளையங் கண்ணார்

குருவி யாய்கிளி சேப்பக்

  குருகினம் இரிதரு கிடங்கில்

பருவ ரால்குதி கொள்ளும்

  பைம்பொழில் வாஞ்சியத் துறையும்

இருவ ராலறி யொண்ணா

  இறைவன தறைகழல் சரணே.  7 

 

 

களங்க ளார்தரு கழனி

  அளிதரக் களிதரு வண்டு

உளங்க ளார்கலிப் பாடல்

  உம்பரில் ஒலித்திடுங் காட்சி

குளங்க ளானிழற் கீழ்நற்

  குயில்பயில் வாஞ்சியத் தடிகள்

விளங்கு தாமரைப் பாதம்

  நினைப்பவர் வினைநலி விலரே.  8 

 

 

வாழை யின்கனி தானும்

  மதுவிம்மு வருக்கையின் சுளையுங்

கூழை வானரந் தம்மிற்

  கூறிது சிறிதெனக் குழறித்

தாழை வாழையந் தண்டாற்

  செருச்செய்து தருக்குவாஞ் சியத்துள்

ஏழை பாகனை யல்லால்

  இறையெனக் கருதுத லிலமே.  9 

 

 

செந்நெ லங்கலங் கழனித்

  திகழ்திரு வாஞ்சியத் துறையும்

மின்ன லங்கலஞ் சடையெம்

  இறைவன தறைகழல் பரவும்

பொன்ன லங்கனல் மாடப்

  பொழிலணி நாவலா ரூரன்

பன்ன லங்கனல் மாலை

  பாடுமின் பத்தரு ளீரே.  10 

 

திருச்சிற்றம்பலம்