முதல்-திருமுறை

073 வானார்சோதி மன்னுசென்னி

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் : கானூர்

திருச்சிற்றம்பலம்

 

வானார்சோதி மன்னுசென்னி 

  வன்னிபு னங்கொன்றைத்

தேனார்போது தானார்கங்கை 

  திங்க ளொடுசூடி

மானேர்நோக்கி கண்டங்குவப்ப 

  மாலை யாடுவார்

கானூர்மேய கண்ணார்நெற்றி 

  ஆன்ஊர் செல்வரே.  1 

 

நீந்தலாகா வெள்ளமூழ்கு 

  நீள்சடை தன்மேலோர்

ஏய்ந்தகோணற் பிறையோடரவு 

  கொன்றை எழிலாரப்

போந்தமென்சொல் இன்பம்பயந்த 

  மைந்த ரவர்போலாம்

காந்தள்விம்மு கானூர்மேய 

  சாந்த நீற்றாரே.  2 

 

சிறையார்வண்டுந் தேனும்விம்மு 

  செய்ய மலர்க்கொன்றை

மறையார்பாட லாடலோடு 

  மால்விடை மேல்வருவார்

இறையார்வந்தென் இல்புகுந்தென் 

  எழில்நல முங்கொண்டார்

கறையார்சோலைக் கானூர்மேய 

  பிறையார் சடையாரே.  3 

 

விண்ணார்திங்கட் கண்ணிவெள்ளை 

  மாலை யதுசூடித்

தண்ணாரக்கோ டாமைபூண்டு 

  தழைபுன் சடைதாழ

எண்ணாவந்தென் இல்புகுந்தங் 

  கெவ்வ நோய்செய்தான்

கண்ணார்சோலைக் கானூர்மேய 

  விண்ணோர் பெருமானே.  4 

 

தார்கொள் கொன்றைக் 

  கண்ணியோடுந் தண்மதியஞ்சூடி

சீர்கொள்பாட லாடலோடு 

  சேட ராய்வந்து

ஊர்கள்தோறும் ஐயம்ஏற்றென் 

  னுள்வெந் நோய்செய்தார்

கார்கொள்சோலைக் கானூர்மேய 

  கறைக்கண் டத்தாரே.  5 

 

முளிவெள்ளெலும்பு நீறுநூலும் 

  மூழ்கு மார்பராய்

எளிவந்தார்போல் ஐயமென்றென் 

  இல்லே புகுந்துள்ளத்

தெளிவுநாணுங் கொண்டகள்வர் 

  தேற லார்பூவில்

களிவண்டியாழ்செய் கானூர்மேய 

  ஒளிவெண் பிறையாரே.  6 

 

மூவாவண்ணர் முளைவெண்பிறையர் 

  முறுவல் செய்திங்கே

பூவார்கொன்றை புனைந்துவந்தார் 

  பொக்கம் பலபேசிப்

போவார்போல மால்செய்துள்ளம் 

  புக்க புரிநூலர்

தேவார்சோலைக் கானூர்மேய 

  தேவ தேவரே.  7 

 

தமிழின்நீர்மை பேசித்தாளம் 

  வீணை பண்ணிநல்ல

முழவமொந்தை மல்குபாடல் 

  செய்கை யிடமோவார்

குமிழின்மேனி தந்துகோல 

  நீர்மை யதுகொண்டார்

கமழுஞ்சோலைக் கானூர்மேய 

  பவள வண்ணரே.  8 

 

அந்தமாதி அயனும்மாலும் 

  ஆர்க்கும் அறிவரியான்

சிந்தையுள்ளும் நாவின் மேலுஞ் 

  சென்னியு மன்னினான்

வந்தென்னுள்ளம் புகுந்துமாலை 

  காலை யாடுவான்

கந்தமல்கு கானூர்மேய 

  எந்தை பெம்மானே.  9 

 

ஆமையரவோ டேனவெண்கொம் 

  பக்கு மாலைபூண்

டாமோர்கள்வர் வெள்ளர்போல 

  உள்வெந் நோய்செய்தார்

ஓமவேத நான்முகனுங் 

  கோணாகணையானும்

சேமமாய செல்வர்கானூர் 

  மேய சேடரே.  10 

 

கழுதுதுஞ்சுங் கங்குலாடுங் 

  கானூர் மேயானைப்

பழுதில்ஞான சம்பந்தன்சொற் 

  பத்தும் பாடியே

தொழுதுபொழுது தோத்திரங்கள் 

  சொல்லித் துதித்துநின்

றழுதுநக்கும் அன்புசெய்வார் 

  அல்லல் அறுப்பாரே. 11

 

திருச்சிற்றம்பலம்