ஏழாம்-திருமுறை

028 பொடியார் மேனியனே

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : கடவூர் வீரட்டம்

திருச்சிற்றம்பலம்

 

பொடியார் மேனியனே

  புரிநூலொரு பாற்பொருந்த

வடியார் மூவிலைவேல்

  வளர்கங்கையின் மங்கையொடுங்

கடியார் கொன்றையனே

  கடவூர்தனுள் வீரட்டத்தெம்

அடிகேள் என்னமுதே

  எனக்கார்துணை நீயலதே.  1 

 

 

பிறையா ருஞ்சடையாய்

  பிரமன்றலை யிற்பலிகொள்

மறையார் வானவனே

  மறையின்பொரு ளானவனே

கறையா ரும்மிடற்றாய்

  கடவூர்தனுள் வீரட்டத்தெம்

இறைவா என்னமுதே

  எனக்கார்துணை நீயலதே.  2 

 

 

அன்றா லின்னிழற்கீழ்

  அறம்நால்வர்க் கருள்புரிந்து

கொன்றாய் காலனுயிர்

  கொடுத்தாய்மறை யோனுக்குமான்

கன்றாருங் கரவா

  கடவூர்த்திரு வீரட்டத்துள்

என்றா தைபெருமான்

  எனக்கார்துணை நீயலதே.  3 

 

 

போரா ருங்கரியின்

  னுரிபோர்த்துப்பொன் மேனியின்மேல்

வாரா ரும்முலையாள்

  ஒருபாகம் மகிழ்ந்தவனே

காரா ரும்மிடற்றாய்

  கடவூர்தனுள் வீரட்டானத்

தாரா என்னமுதே

  எனக்கார்துணை நீயலதே.  4 

 

 

மையார் கண்டத்தினாய்

  மதமாவுரி போர்த்தவனே

பொய்யா தென்னுயிருள்

  புகுந்தாயின்னம் போந்தறியாய்

கையார் ஆடரவா

  கடவூர்தனுள் வீரட்டத்தெம்

ஐயா என்னமுதே

  எனக்கார்துணை நீயலதே.  5 

 

 

மண்ணீர் தீவெளிகால்

  வருபூதங்க ளாகிமற்றும்

பெண்ணோ டாணலியாய்ப்

  பிறவாவுரு ஆனவனே

கண்ணா ரும்மணியே

  கடவூர்தனுள் வீரட்டத்தெம்

அண்ணா என்னமுதே

  எனக்கார்துணை நீயலதே.  6 

 

 

எரியார் புன்சடைமேல்

  இளநாகம் அணிந்தவனே

நரியா ருஞ்சுடலை

  நகுவெண்டலை கொண்டவனே

கரியார் ஈருரியாய்

  கடவூர்தனுள் வீரட்டத்தெம்

அரியாய் என்னமுதே

  எனக்கார்துணை நீயலதே.  7 

 

 

வேறா உன்னடியேன்

  விளங்குங்குழைக் காதுடையாய்

தேறேன் உன்னையல்லாற்

  சிவனேயென் செழுஞ்சுடரே

காறார் வெண்மருப்பா

  கடவூர்த்திரு வீரட்டத்துள்

ஆறார் செஞ்சடையாய்

  எனக்கார்துணை நீயலதே.  8 

 

 

அயனோ டன்றரியும்

  அடியும்முடி காண்பரிய

பயனே எம்பரனே

  பரமாய பரஞ்சுடரே

கயமா ருஞ்சடையாய்

  கடவூர்த்திரு வீரட்டத்துள்

அயனே என்னமுதே

  எனக்கார்துணை நீயலதே.  9 

 

 

காரா ரும்பொழில்சூழ்

  கடவூர்த்திரு வீரட்டத்துள்

ஏரா ரும்மிறையைத்

  துணையாஎழில் நாவலர்கோன்

ஆரூ ரன்னடியான்

  அடித்தொண்டன் உரைத்ததமிழ்

பாரோ ரேத்தவல்லார்

  பரலோகத் திருப்பாரே. 10

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

கணநாத நாயனார்
View Details
அகப்பேய்ச் சித்தர்
View Details
நூல்களின் ஏற்ற தாழ்வு கண்டறிதல்
View Details