முதல்-திருமுறை

071 பிறைகொள் சடையர்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் : நறையூர்ச்சித்தீச்சரம்

திருச்சிற்றம்பலம்

 

பிறைகொள் சடையர் புலியி னுரியர் 

  பேழ்வாய் நாகத்தர்

கறைகொள் கண்டர் கபால 

  மேந்துங் கையர் கங்காளர்

மறைகொள் கீதம் பாடச் 

  சேடர் மனையில் மகிழ்வெய்திச்

சிறைகொள் வண்டு தேனார் 

  நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.  1 

 

பொங்கார் சடையர் புனலர் 

  அனலர் பூதம் பாடவே

தங்கா தலியுந் தாமும் 

  உடனாய்த் தனியோர் விடையேறிக்

கொங்கார் கொன்றை வன்னி 

  மத்தஞ் சூடிக் குளிர்பொய்கைச்

செங்கால் அனமும் பெடையுஞ் 

  சேருஞ் சித்தீச் சரத்தாரே.  2 

 

முடிகொள் சடையர் முளைவெண் 

  மதியர் மூவாமேனிமேல்

பொடிகொள் நூலர் புலியி 

  னதளர் புரிபுன் சடைதாழக்

கடிகொள் சோலை வயல்சூழ் 

  மடுவிற் கயலா ரினம்பாயக்

கொடிகொள் மாடக் குழாமார் 

  நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.  3 

 

பின்தாழ் சடைமேல் நகுவெண் 

  டலையர் பிரமன் தலையேந்தி

மின்தா ழுருவிற் சங்கார் 

  குழைதான் மிளிரும் ஒருகாதர்

பொன்தாழ் கொன்றை செருந்தி 

  புன்னை பொருந்து செண்பகம்

சென்றார் செல்வத் திருவார் 

  நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.  4 

 

நீரார் முடியர் கறைகொள் 

  கண்டர் மறைகள் நிறைநாவர்

பாரார் புகழால் பத்தர் 

  சித்தர் பாடி யாடவே

தேரார் வீதி முழவார் 

  விழவின் ஒலியுந் திசைசெல்லச்

சீரார் கோலம் பொலியும் 

  நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.  5 

 

நீண்ட சடையர் நிரைகொள் 

  கொன்றை விரைகொள் மலர்மாலை

தூண்டு சுடர்பொன் னொளிகொள் 

  மேனிப் பவளத் தெழிலார்வந்

தீண்டு மாடம் எழிலார் 

  சோலை யிலங்கு கோபுரம்

தீண்டு மதியந் திகழும் 

  நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.  6 

 

குழலார் சடையர் கொக்கின் 

  இறகர் கோல நிறமத்தம்

தழலார் மேனித் தவள 

  நீற்றர் சரிகோவ ணக்கீளர்

எழிலார் நாகம் புலியின் 

  உடைமேல் இசைத்து1 விடையேறிக்

கழலார் சிலம்பு புலம்ப 

  வருவார் சித்தீச் சரத்தாரே. 7

 

கரையார் கடல்சூழ் இலங்கை 

  மன்னன் கயிலை மலைதன்னை

வரையார் தோளா லெடுக்க 

  முடிகள் நெரித்து மனமொன்றி

உரையார் கீதம் பாட 

  நல்ல வுலப்பி லருள்செய்தார்

திரையார் புனல்சூழ் செல்வ 

  நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.  8 

 

நெடியான் பிரமன் நேடிக் 

  காணார் நினைப்பார் மனத்தாராய்

அடியா ரவரும் அருமா 

  மறையும் அண்டத் தமரரும்

முடியால் வணங்கிக் குணங்க 

  ளேத்தி முதல்வா வருளென்னச்

செடியார் செந்நெல் திகழும் 

  நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.  9 

 

நின்றுண் சமணர் இருந்துண் 

  தேரர் நீண்ட போர்வையார்

ஒன்று முணரா ஊமர் 

  வாயில் உரைகேட் டுழல்வீர்காள்

கன்றுண்பயப்பா லுண்ண முலையில் 

  கபால மயல்பொழியச்2

சென்றுண் டார்ந்து சேரும் 

  நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 10

 

குயிலார் கோல மாத 

  விகள் குளிர்பூஞ் சுரபுன்னை

செயிலார் பொய்கை சேரும் 

  நறையூர்ச் சித்தீச் சரத்தாரை

மயிலார் சோலை சூழ்ந்த 

  காழி மல்கு சம்பந்தன்

பயில்வார்க் கினிய பாடல் 

  வல்லார் பாவ நாசமே. 11

திருச்சிற்றம்பலம்

மேலும்

கலிய நாயனார்
View Details
அழுகணிச் சித்தர்
View Details
சாவளிகே சிவலிங்கேஸ்வர சித்தர்
View Details