ஏழாம்-திருமுறை

009 மலைக்கு மகள்அஞ்ச

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : அரிசிற்கரைப்புத்தூர்

திருச்சிற்றம்பலம்

 

மலைக்கு மகள்அஞ்ச மதகரியை உரித்தீர்

  எரித்தீர் வருமுப் புரங்கள்

சிலைக்குங் கொலைச்சே வுகந்தேற் றொழியீர்

  சில்பலிக் கில்கள்தோறுஞ் செலவொழியீர்

கலைக்கொம் புங்கரி மருப்பும் இடறிக்

  கலவம் மயிற்பீலியுங் காரகிலும்

அலைக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை

  அழகார் திருப்புத்தூர் அழகனீரே.  1 

 

 

அருமல ரோன்சிரம் ஒன்றறுத் தீர்செறுத்

  தீரழற் சூலத்தில் அந்தகனைத்

திருமகள் கோனெடு மால்பல நாள்சிறப்

  பாகிய பூசனை செய்பொழுதில்

ஒருமலர் ஆயிரத் திற்குறை வாநிறை

  வாகவோர் கண்மலர் சூட்டலுமே

பொருவிறல் ஆழி புரிந்தளித் தீர்பொழி

  லார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.  2 

 

 

தரிக்குந் தரைநீர் தழற்காற் றந்தரஞ்

  சந்திரன் சவிதாவிய மானனானீர்

சரிக்கும் பலிக்குத் தலையங்கை யேந்தித்

  தையலார் பெய்யக்கொள் வதுதக்கதன்றால்

முரிக்குந் தளிர்ச்சந் தனத்தொடு வேயும்

  முழங்குந் திரைக்கைக ளால்வாரிமோதி

அரிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை

  அழகார் திருப்புத்தூர் அழகனீரே.  3 

 

 

கொடியுடை மும்மதில் வெந்தழி யக்குன்றம்

  வில்லா நாணியிற் கோலொன்றினால்

இடிபட எய்தெரித்தீர் இமைக்கும் அளவில்

  உமக்கார் எதிரெம் பெருமான்

கடிபடு பூங்கணை யான்கருப் புச்சிலைக்

  காமனை வேவக் கடைக்கண்ணினாற்

பொடிபட நோக்கிய தென்னை கொல்லோ

  பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே.  4 

 

 

வணங்கித்தொழு வாரவர் மால்பிர மன்மற்றும்

  வானவர் தானவர் மாமுனிவர்

உணங்கற்றலை யிற்பலி கொண்ட லென்னே

  உலகங்கள் எல்லாமுடை யீர்உரையீர்

இணங்கிக் கயல்சேல் இளவாளை பாய

  இனக்கெண்டை துள்ளக்கண் டிருந்தஅன்னம்

அணங்கிக் குணங்கொள் அரிசிற் றென்கரை

  அழகார் திருப்புத்தூர் அழகனீரே.  5 

 

 

அகத்தடி மைசெய்யும் அந்தணன் றான்அரி

  சிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்

மிகத்தளர் வெய்திக் குடத்தையும் நும்முடி

  மேல்விழுத் திட்டு நடுங்குதலும்

வகுத்தவ னுக்குநித் தற்படி யும்வரு

  மென்றொரு காசினை நின்றநன்றிப்

புகழ்த்துணை கைப்புகச் செய்துகந் தீர்பொழி

  லார்திருப் புத்தூர்ப் புனிதனீரே. 6 

 

 

பழிக்கும் பெருந்தக்கன் எச்சம் அழியப்

  பகலோன்முத லாப்பல தேவரையுந்

தெழித்திட் டவரங்கஞ் சிதைத்தரு ளுஞ்செய்கை

  என்னைகொலோ மைகொள் செம்மிடற்றீர்

விழிக்குந் தழைப்பீலி யொடேல முந்தி

  விளங்கும் மணிமுத்தொடு பொன்வரன்றி

அழிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை

  அழகார் திருப்புத்தூர் அழகனீரே.  7 

 

 

பறைக்கண் நெடும்பேய்க் கணம்பாடல் செய்யக்

  குறட்பா ரிடங்கள்பறை தாம்முழக்கப்

பிறைக்கொள் சடைதாழப் பெயர்ந்து நட்டம்

  பெருங்கா டரங்காகநின் றாடலென்னே

கறைக்கொள் மணிகண் டமுந்திண் டோள்களுங்

  கரங்கள்சிரந் தன்னிலுங் கச்சுமாகப்

பொறிக்கொள் அரவம் புனைந்தீர் பலவும்

  பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே.  8 

 

 

மழைக்கண்மட வாளையோர் பாகம்வைத் தீர்வளர்

  புன்சடைக் கங்கையை வைத்துகந்தீர்

முழைக்கொள் அரவோ டென்பணி கலனா

  முழுநீறு மெய்பூசுதல் என்னைகொலோ

கழைக்கொள் கரும்புங் கதலிக் கனியுங்

  கமுகின் பழுக்காயுங் கவர்ந்துகொண்டிட்

டழைக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை

  அழகார் திருப்புத்தூர் அழகனீரே.  9 

 

 

கடிக்கும் அரவால் மலையால் அமரர்

  கடலைக் கடையவெழு காளகூடம்

ஒடிக்கும் உலகங் களைஎன் றதனை

  உமக்கேயமு தாகவுண் டீருமிழீர்

இடிக்கும் மழைவீழ்த் திழித்திட் டருவி

  இருபாலுமோடி இரைக்குந் திரைக்கை

அடிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை

  அழகார் திருப்புத்தூர் அழகனீரே.  10 

 

 

காரூர் மழைபெய்து பொழியரு விக்கழை

  யோடகி லுந்திட் டிருகரையும்

போரூர் புனல்சேர் அரிசிற் றென்கரைப்

  பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதர்தம்மை

ஆரூரன் அருந்தமி ழைந்தினொ டைந்தழ

  காலுரைப் பார்களுங் கேட்பவருஞ்

சீரூர் தருதேவர் கணங்க ளொடும்

  இணங்கிச் சிவலோகம தெய்துவரே.  11 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

முனையடுவார் நாயனார்
View Details
மங்கையர்க்கரசியார்
View Details
சேரனுக்கு நிருபம் கொடுத்தல்
View Details