ஆறாம்-திருமுறை

031 இடர்கெடுமா றெண்ணுதியேல்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஆறாம் திருமுறை

  தலம் : ஆரூர்

திருச்சிற்றம்பலம்

 

இடர்கெடுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா

ஈண்டொளிசேர் கங்கைச் சடையா யென்றுஞ்

சுடரொளியா யுள்விளங்கு சோதீ யென்றுந்

தூநீறு சேர்ந்திலங்கு தோளா வென்றுங்

கடல்விடம துண்டிருண்ட கண்டா வென்றுங்

கலைமான் மறியேந்து கையா வென்றும்

அடல்விடையாய் ஆரமுதே ஆதீ யென்றும்

ஆரூரா வென்றென்றே அலறா நில்லே.  1 

 

 

செடியேறு தீவினைகள் தீரும் வண்ணஞ் 

சிந்தித்தே நெஞ்சமே திண்ண மாகப்

பொடியேறு திருமேனி யுடையா யென்றும்

புரந்தரன்றன் தோள்துணித்த புனிதா வென்றும்

அடியேனை யாளாகக் கொண்டா யென்றும்

அம்மானே ஆரூரெம் மரசே யென்றுங்

கடிநாறு பொழிற்கச்சிக் கம்பா வென்றுங்

கற்பகமே யென்றென்றே கதறா நில்லே.  2 

 

 

நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா 

நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப்

புலர்வதன்முன் னலகிட்டு மெழுக்கு மிட்டுப்

பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்

தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்

சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்

அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீ யென்றும்

ஆரூரா வென்றென்றே அலறா நில்லே.  3 

 

 

புண்ணியமும் நன்னெறியு மாவ தெல்லாம் 

நெஞ்சமே இதுகண்டாய் பொருந்தக் கேள்நீ

நுண்ணியவெண் ணூல்கிடந்த மார்பா வென்றும்

நுந்தாத வொண்சுடரே யென்று நாளும்

விண்ணியங்கு தேவர்களும் வேதம் நான்கும் 

விரைமலர்மேல் நான்முகனும் மாலுங் கூடி

எண்ணரிய திருநாம முடையா யென்றும்

எழிலாரூ ராவென்றே ஏத்தா நில்லே.  4 

 

 

இழைத்தநாள் எல்லை கடப்ப தென்றால்

இரவினொடு நண்பகலு மேத்தி வாழ்த்திப்

பிழைத்ததெலாம் பொறுத்தருள்செய் பெரியோ யென்றும்

பிஞ்ஞகனே மைஞ்ஞவிலுங் கண்டா வென்றும்

அழைத்தலறி அடியேனுன் னரணங் கண்டாய்

அணியாரூர் இடங்கொண்ட அழகா வென்றுங்

குழற்சடையெங் கோனென்றுங் கூறு நெஞ்சே

குற்றமில்லை யென்மேல்நான் கூறி னேனே.  5 

 

 

நீப்பரிய பல்பிறவி நீக்கும் வண்ணம் 

நினைந்திருந்தேன் காண்நெஞ்சே நித்த மாகச்

சேப்பிரியா வெல்கொடியி னானே யென்றுஞ்

சிவலோக நெறிதந்த சிவனே யென்றும்

பூப்பிரியா நான்முகனும் புள்ளின் மேலைப் 

புண்டரிகக் கண்ணானும் போற்றி யென்னத்

தீப்பிழம்பாய் நின்றவனே செல்வ மல்குந்

திருவாரூ ராவென்றே சிந்தி நெஞ்சே.  6 

 

 

பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டிற்

பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டிற்

சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டிற்

சொல்லுகேன் கேள்நெஞ்சே துஞ்சா வண்ணம்

உற்றவரும் உறுதுணையும் நீயே யென்றும்

உன்னையல்லால் ஒருதெய்வம் உள்கே னென்றும்

புற்றரவக் கச்சார்த்த புனிதா வென்றும்

பொழிலாரூ ராவென்றே போற்றா நில்லே.  7 

 

 

மதிதருவன் நெஞ்சமே உஞ்சு போக

வழியாவ திதுகண்டாய் வானோர்க் கெல்லாம்

அதிபதியே ஆரமுதே ஆதி யென்றும்

அம்மானே ஆரூரெம் மையா வென்றுந்

துதிசெய்து துன்றுமலர் கொண்டு தூவிச் 

சூழும் வலஞ்செய்து தொண்டு பாடிக்

கதிர்மதிசேர் சென்னியனே கால காலா

கற்பகமே யென்றென்றே கதறா நில்லே.  8 

 

 

பாசத்தைப் பற்றறுக்க லாகு நெஞ்சே

பரஞ்சோதி பண்டரங்கா பாவ நாசா

தேசத் தொளிவிளக்கே தேவ தேவே

திருவாரூர்த் திருமூலட் டானா வென்றும்

நேசத்தை நீபெருக்கி நேர்நின் றுள்கி

நித்தலுஞ் சென்றடிமேல் வீழ்ந்து நின்று

ஏசற்று நின்றிமையோ ரேறே வென்றும்

எம்பெருமா னென்றென்றே ஏத்தா நில்லே.  9 

 

 

புலன்களைந்தால் ஆட்டுண்டு போது போக்கிப் 

புறம்புறமே திரியாதே போது நெஞ்சே

சலங்கொள்சடை முடியுடைய தலைவா வென்றுந்

தக்கன்செய் பெருவேள்வி தகர்த்தா யென்றும்

இலங்கையர்கோன் சிரநெரித்த இறைவா வென்றும்

எழிலாரூ ரிடங்கொண்ட எந்தா யென்றும்

நலங்கொளடி என்றலைமேல் வைத்தா யென்றும்

நாடோ றும் நவின்றேத்தாய் நன்மை யாமே.  10 

 

திருச்சிற்றம்பலம்