ஆறாம்-திருமுறை

011 பிறவாதே தோன்றிய பெம்மான்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஆறாம் திருமுறை

  தலம் : புன்கூர்

திருச்சிற்றம்பலம்

 

பிறவாதே தோன்றிய பெம்மான் றன்னைப்

பேணாதார் அவர்தம்மைப் பேணா தானைத்

துறவாதே கட்டறுத்த சோதி யானைத்

தூநெறிக்குந் தூநெறியாய் நின்றான் றன்னைத்

திறமாய எத்திசையுந் தானே யாகித் 

திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை

நிறமா மொளியானை நீடூ ரானை

நீதனே னென்னேநான் நினையா வாறே.  1 

 

 

பின்றானும் முன்றானு மானான் றன்னைப்

பித்தர்க்குப் பித்தனாய் நின்றான் றன்னை

நன்றாங் கறிந்தவர்க்குந் தானே யாகி 

நல்வினையுந் தீவினையு மானான் றன்னைச்

சென்றோங்கி விண்ணளவுந் தீயா னானைத்

திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை

நின்றாய நீடூர் நிலாவி னானை

நீதனே னென்னேநான் நினையா வாறே.  2 

 

 

இல்லானை எவ்விடத்தும் உள்ளான் றன்னை

இனியநினை யாதார்க் கின்னா தானை

வல்லானை வல்லடைந்தார்க் கருளும் வண்ணம்

மாட்டாதார்க் கெத்திறத்தும் மாட்டா தானைச்

செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைத்

திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை

நெல்லால் விளைகழனி நீடூ ரானை

நீதனே னென்னேநான் நினையா வாறே.  3 

 

 

கலைஞானங் கல்லாமே கற்பித் தானைக்

கடுநரகஞ் சாராமே காப்பான் றன்னைப்

பலவாய வேடங்கள் தானே யாகிப்

பணிவார்கட் கங்கங்கே பற்றா னானைச்

சிலையாற் புரமெரித்த தீயா டியைத்

திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை

நிலையார் மணிமாட நீடூ ரானை

நீதனே னென்னேநான் நினையா வாறே.  4 

 

 

நோக்காதே எவ்வளவும் நோக்கி னானை

நுணுகாதே யாதொன்றும் நுணுகி னானை

ஆக்காதே யாதொன்று மாக்கி னானை

அணுகாதா ரவர்தம்மை அணுகா தானைத்

தேக்காதே தெண்கடல்நஞ் சுண்டான் றன்னைத்

திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை

நீக்காத பேரொளிசேர் நீடு ரானை

நீதனே னென்னேநான் நினையா வாறே.  5 

 

 

பூணலாப் பூணானைப் பூசாச் சாந்த 

முடையானை முடைநாறும் புன்க லத்தில்

ஊணலா வூணானை யொருவர் காணா 

உத்தமனை யொளிதிகழும் மேனி யானைச்

சேணுலாஞ் செழும்பவளக் குன்றொப் பானைத்

திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை

நீணுலா மலர்க்கழனி நீடூ ரானை

நீதனே னென்னேநான் நினையா வாறே.  6 

 

 

உரையார் பொருளுக் குலப்பி லானை

ஒழியாமே எவ்வுயிரு மானான் றன்னைப்

புரையாய்க் கனமாயாழ்ந் தாழா தானைப்

புதியனவு மாய்மிகவும் பழையான் றன்னைத்

திரையார் புனல்சேர் மகுடத் தானைத்

திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை

நிரையார் மணிமாட நீடூ ரானை

நீதனே னென்னேநான் நினையா வாறே.  7 

 

 

கூரரவத் தணையானுங் குளிர்தண் பொய்கை 

மலரவனுங் கூடிச்சென் றறிய மாட்டார்

ஆரொருவ ரவர்தன்மை யறிவார் தேவர்

அறிவோமென் பார்க்கெல்லா மறிய லாகாச்

சீரரவக் கழலானை நிழலார் சோலைத் 

திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை

நீரரவத் தண்கழனி நீடூ ரானை

நீதனே னென்னேநான் நினையா வாறே.  8 

 

 

கையெலாம் நெய்பாயக் கழுத்தே கிட்டக்

கால்நிமிர்த்து நின்றுண்ணுங் கையர் சொன்ன

பொய்யெலாம் மெய்யென்று கருதிப் புக்குப் 

புள்ளுவரா லகப்படா துய்யப் போந்தேன்

செய்யெலாஞ் செழுங்கமலப் பழன வேலித் 

திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை

நெய்தல்வாய்ப் புனற்படப்பை நீடூ ரானை

நீதனே னென்னேநான் நினையா வாறே.  9 

 

 

இகழுமா றெங்ஙனே ஏழை நெஞ்சே

இகழாது பரந்தொன்றாய் நின்றான் றன்னை

நகழமால் வரைக்கீழிட் டரக்கர் கோனை 

நலனழித்து நன்கருளிச் செய்தான் றன்னைத்

திகழுமா மதகரியி னுரிபோர்த் தானைத்

திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை

நிகழுமா வல்லானை நீடூ ரானை

நீதனே னென்னேநான் நினையா வாறே. 10

 

திருச்சிற்றம்பலம்