ஐந்தாம்-திருமுறை

100 வேத நாயகன்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : பொது

திருச்சிற்றம்பலம்

 

வேத நாயகன்

  வேதியர் நாயகன் 

மாதின் நாயகன்

  மாதவர் நாயகன் 

ஆதி நாயகன்

  ஆதிரை நாயகன் 

பூத நாயகன்

  புண்ணிய மூர்த்தியே.  1 

 

 

செத்துச் செத்துப்

  பிறப்பதே தேவென்று 

பத்தி செய்மனப்

  பாறைகட் கேறுமோ 

அத்த னென்றரி

  யோடு பிரமனுந் 

துத்தி யஞ்செய

  நின்றநற் சோதியே.  2 

 

 

நூறு கோடி

  பிரமர்கள் நொந்தினார் 

ஆறு கோடி

  நாராயண ரங்ஙனே 

ஏறு கங்கை

  மணலெண்ணில் இந்திரர் 

ஈறி லாதவன்

  ஈசன் ஒருவனே.  3 

 

 

வாது செய்து

  மயங்கு மனத்தராய் 

ஏது சொல்லுவீ

  ராகிலும் ஏழைகாள் 

யாதோர் தேவ

  ரெனப்படு வார்க் கெல்லாம் 

மாதே வன்னலாற்

  றேவர்மற் றில்லையே.  4 

 

 

கூவ லாமை

  குரைகட லாமையைக் 

கூவ லோடொக்கு

  மோகட லென்றல்போற் 

பாவ காரிகள்

  பார்ப்பரி தென்பராற் 

தேவ தேவன்

  சிவன்பெருந் தன்மையே.  5 

 

 

பேய்வ னத்தமர்

  வானைப்பி ரார்த்தித்தார்க் 

கீவ னையிமை

  யோர்முடி தன்னடிச் 

சாய்வ னைச்சல

  வார்கள் தமக்குடற் 

சீவ னைச்சிவ

  னைச்சிந்தி யார்களே.  6 

 

 

எரிபெ ருக்குவர்

  அவ்வெரி ஈசன 

துருவ ருக்கம

  தாவ துணர்கிலார் 

அரிய யற்கரி

  யானை அயர்த்துப்போய் 

நரிவி ருத்தம

  தாகுவர் நாடரே  7 

 

 

அருக்கன் பாதம்

  வணங்குவர் அந்தியில் 

அருக்க னாவான்

  அரனுரு வல்லனோ 

இருக்கு நான்மறை

  ஈசனை யேதொழுங் 

கருத்தி னைநினை

  யார்கன் மனவரே.  8 

 

 

தாயி னும்நல்ல

  சங்கர னுக்கன்பர் 

ஆய வுள்ளத்

  தமுதருந் தப்பெறார் 

பேயர் பேய்முலை

  யுண்டுயிர் போக்கிய 

மாயன் மாயத்துப்

  பட்ட மனத்தரே.  9 

 

 

அரக்கன் வல்லரட்

  டாங்கொழித் தாரருள் 

பெருக்கச் செய்த

  பிரான்பெருந் தன்மையை 

அருத்தி செய்தறி

  யப்பெறு கின்றிலர் 

கருத்தி லாக்கய

  வக்கணத் தோர்களே. 10

 

திருச்சிற்றம்பலம்