ஐந்தாம்-திருமுறை

091 ஏயி லானையெ

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : பொது

திருச்சிற்றம்பலம்

 

ஏயி லானையெ

  னிச்சை யகம்படிக்

கோயி லானைக்

  குணப்பெருங் குன்றினை

வாயி லானை

  மனோன்மனி யைப்பெற்ற

தாயி லானைத்

  தழுவுமென் ஆவியே.  1 

 

 

முன்னை ஞான

  முதற்றனி வித்தினைப்

பின்னை ஞானப்

  பிறங்கு சடையனை

என்னை ஞானத்

  திருளறுத் தாண்டவன்

தன்னை ஞானத்

  தளையிட்டு வைப்பனே.  2 

 

 

ஞானத் தாற்றொழு

  வார்சில ஞானிகள்

ஞானத் தாற்றொழு

  வேனுனை நானலேன்

ஞானத் தாற்றொழு

  வார்கள் தொழக்கண்டு

ஞானத் தாயுனை

  நானுந் தொழுவனே.  3 

 

 

புழுவுக் குங்குணம்

  நான்கெனக் கும்மதே

புழுவுக் கிங்கெனக்

  குள்ளபொல் லாங்கில்லை

புழுவி னுங்கடையேன்புனி

  தன்றமர்

குழுவுக் கெவ்விடத்

  தேன்சென்று கூடவே.  4 

 

 

மலையே வந்து

  விழினும் மனிதர்காள்

நிலையி னின்று

  கலங்கப் பெறுதிரேல்

தலைவ னாகிய

  ஈசன் றமர்களைக்

கொலைசெய் யானைதான்

  கொன்றிடு கிற்குமே.  5 

 

 

கற்றுக் கொள்வன

  வாயுள நாவுள

இட்டுக் கொள்வன

  பூவுள நீருள

கற்றைச் செஞ்சடை

  யானுளன் நாமுளோம்

எற்றுக் கோநம

  னால்முனி வுண்பதே.  6 

 

 

மனிதர் காளிங்கே

  வம்மொன்று சொல்லுகேன்

கனிதந் தாற்கனி

  யுண்ணவும் வல்லிரே

புனிதன் பொற்கழல்

  ஈசனெ னுங்கனி

இனிது சாலவும்

  ஏசற் றவர்கட்கே.  7 

 

 

என்னை யேதும்

  அறிந்திலன் எம்பிரான்

தன்னை நானுமு

  னேது மறிந்திலேன்

என்னைத் தன்னடி

  யானென் றறிதலுந்

தன்னை நானும்

  பிரானென் றறிந்தெனே.  8 

 

 

தெள்ளத் தேறித்

  தெளிந்துதித் திப்பதோர்

உள்ளத் தேறல்

  அமுத ஒளிவெளி

கள்ளத் தேன்கடி

  யேன்கவ லைக்கடல்

வெள்ளத் தேனுக்கெவ்

  வாறு விளைந்ததே.  9 

 

 

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  10 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

அகப்பேய்ச் சித்தர்
View Details
அந்தணப் பெண்ணின் கொலையைக் கண்டுபிடித்தல்
View Details
கணநாத நாயனார்
View Details