ஐந்தாம்-திருமுறை

089 ஒன்று வெண்பிறைக்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : பொது

திருச்சிற்றம்பலம்

 

ஒன்று வெண்பிறைக்

  கண்ணியோர் கோவணம்

ஒன்று கீளுமை

  யோடு முடுத்தது

ஒன்று வெண்டலை

  யேந்தியெம் முள்ளத்தே

ஒன்றி நின்றங்

  குறையும் ஒருவனே.  1 

 

 

இரண்டு மாமவர்க்

  குள்ளன செய்தொழில்

இரண்டு மாமவர்க்

  குள்ளன கோலங்கள்

இரண்டு மில்லிள

  மானெமை யாளுகந்

திரண்டு போதுமென்

  சிந்தையுள் வைகுமே.  2 

 

 

மூன்று மூர்த்தியுள்

  நின்றிய லுந்தொழில்

மூன்று மாயின

  மூவிலைச் சூலத்தன்

மூன்று கண்ணினன்

  தீத்தொழில் மூன்றினன்

மூன்று போதுமென்

  சிந்தையுள் மூழ்குமே.  3 

 

 

நாலின் மேன்முகஞ்

  செற்றது மன்னிழல்

நாலு நன்குணர்ந்

  திட்டது மின்பமாம்

நாலு வேதஞ்

  சரித்தது நன்னெறி

நாலு போலெம்

  அகத்துறை நாதனே.  4 

 

 

அஞ்சு மஞ்சுமோ

  ராடி யரைமிசை

அஞ்சு போலரை

  யார்த்ததின் தத்துவம்

அஞ்சு மஞ்சுமோ

  ரோரைஞ்சு மாயவன்

அஞ்சு மாமெம்

  அகத்துறை ஆதியே.  5 

 

 

ஆறு கால்வண்டு

  மூசிய கொன்றையன்

ஆறு சூடிய

  அண்ட முதல்வனார்

ஆறு கூர்மையர்க்

  கச்சம யப்பொருள்

ஆறு போலெம்

  அகத்துறை ஆதியே.  6 

 

 

ஏழு மாமலை

  ஏழ்பொழில் சூழ்கடல்

ஏழு போற்றுமி

  ராவணன் கைந்நரம்

பேழு கேட்டருள்

  செய்தவன் பொற்கழல்

ஏழுஞ் சூழடி

  யேன்மனத் துள்ளவே.  7 

 

 

எட்டு மூர்த்தியாய்

  நின்றிய லுந்தொழில்

எட்டு வான்குணத்

  தீசனெம் மான்றனை

எட்டு மூர்த்தியு

  மெம்மிறை யெம்முளே

எட்டு மூர்த்தியு

  மெம்மு ளொடுங்குமே.  8 

 

 

ஒன்ப தொன்பதி

  யானை யொளிகளி

றொன்ப தொன்பது

  பல்கணஞ் சூழவே

ஒன்ப தாமவை

  தீத்தொழி லின்னுரை

ஒன்ப தொத்துநின்

  றென்னு ளொடுங்குமே.  9 

 

 

பத்து நூறவன்

  வெங்கண்வெள் ளேற்றண்ணல்

பத்து நூறவன்

  பல்சடை தோண்மிசை

பத்தி யாமில

  மாதலின் ஞானத்தாற்

பத்தி யானிடங்

  கொண்டது பள்ளியே.  10 

 

திருச்சிற்றம்பலம்