ஐந்தாம்-திருமுறை

087 பட்ட நெற்றியர்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : மணஞ்சேரி

திருச்சிற்றம்பலம்

 

பட்ட நெற்றியர்

  பாய்புலித் தோலினர்

நட்ட நின்று

  நவில்பவர் நாடொறுஞ்

சிட்டர் வாழ்திரு

  வார்மணஞ் சேரியெம்

வட்ட வார்சடை

  யார்வண்ணம் வாழ்த்துமே.  1 

 

 

துன்னு வார்குழ

  லாளுமை யாளொடும்

பின்னு வார்சடை

  மேற்பிறை வைத்தவர்

மன்னு வார்மணஞ்

  சேரி மருந்தினை

உன்னு வார்வினை

  யாயின ஓயுமே.  2 

 

 

புற்றி லாடர

  வாட்டும் புனிதனார்

தெற்றி னார்புரந்

  தீயெழச் செற்றவர்

சுற்றி னார்மதில்

  சூழ்மணஞ் சேரியார்

பற்றி னாரவர்

  பற்றவர் காண்மினே.  3 

 

 

மத்த மும்மதி

  யும்வளர் செஞ்சடை

முத்தர் முக்குணர்

  மூசர வம்மணி

சித்தர் தீவணர்

  சீர்மணஞ் சேரியெம்

வித்தர் தாம்விருப்

  பாரை விருப்பரே.  4 

 

 

துள்ளு மான்மறி

  தூமழு வாளினர்

வெள்ள நீர்கரந்

  தார்சடை மேலவர்

அள்ள லார்வயல்

  சூழ்மணஞ் சேரியெம்

வள்ள லார்கழல்

  வாழ்த்தவாழ் வாவதே.  5 

 

 

நீர்ப ரந்த

  நிமிர்புன் சடையின்மேல்

ஊர்ப ரந்த

  உரகம் அணிபவர்

சீர்ப ரந்த

  திருமணஞ் சேரியார்

ஏர்ப ரந்தங்

  கிலங்குசூ லத்தரே.  6 

 

 

சுண்ணத் தர்சுடு

  நீறுகந் தாடலார்

விண்ணத் தம்மதி

  சூடிய வேதியர்

மண்ணத் தம்முழ

  வார்மணஞ் சேரியார்

வண்ணத் தம்முலை

  யாளுமை வண்ணரே.  7 

 

 

துன்ன வாடையர்

  தூமழு வாளினர்

பின்னு செஞ்சடை

  மேற்பிறை வைத்தவர்

மன்னு வார்பொழில்

  சூழ்மணஞ் சேரியெம்

மன்ன னார்கழ

  லேதொழ வாய்க்குமே.  8 

 

 

சித்தர் தேவர்கள்

  மாலொடு நான்முகன்

புத்தர் தேரமண்

  கையர் புகழவே

மத்தர் தாமறி

  யார்மணஞ் சேரியெம்

அத்த னாரடி

  யார்க்கல்ல லில்லையே.  9 

 

 

கடுத்த மேனி

  அரக்கன் கயிலையை

எடுத்த வனெடு

  நீண்முடி பத்திறப்

படுத்த லுமணஞ்

  சேரி யருளெனக்

கொடுத்த னன்கொற்ற

  வாளொடு நாமமே. 10

 

திருச்சிற்றம்பலம்