ஐந்தாம்-திருமுறை

084 மாட்டுப் பள்ளி

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : மேலைத்திருக்காட்டுப்பள்ளி

திருச்சிற்றம்பலம்

 

மாட்டுப் பள்ளி

  மகிழ்ந்துறை வீர்க்கெலாங்

கேட்டுப் பள்ளிகண்

  டீர்கெடு வீரிது

ஓட்டுப் பள்ளிவிட்

  டோட லுறாமுனங்

காட்டுப் பள்ளியு

  ளான்கழல் சேர்மினே.  1 

 

 

மாட்டைத் தேடி

  மகிழ்ந்துநீர் நும்முளே

நாட்டுப் பொய்யெலாம்

  பேசிடு நாணிலீர்

கூட்டை விட்டுயிர்

  போவதன் முன்னமே

காட்டுப் பள்ளியு

  ளான்கழல் சேர்மினே.  2 

 

 

தேனை வென்றசொல்

  லாளொடு செல்வமும்

ஊனை விட்டுயிர்

  போவதன் முன்னமே

கான வேடர்

  கருதுங்காட் டுப்பள்ளி

ஞான நாயக

  னைச்சென்று நண்ணுமே.  3 

 

 

அருத்த மும்மனை

  யாளொடு மக்களும்

பொருத்த மில்லை

  பொல்லாதது போக்கிடுங்

கருத்தன் கண்ணுதல்

  அண்ணல்காட் டுப்பள்ளித்

திருத்தன் சேவடி

  யைச்சென்று சேர்மினே.  4 

 

 

சுற்ற முந்துணை

  யும்மனை வாழ்க்கையும்

அற்ற போதணை

  யாரவ ரென்றென்றே

கற்ற வர்கள்

  கருதுங்காட் டுப்பள்ளிப்

பெற்ற மேறும்

  பிரானடி சேர்மினே.  5 

 

 

அடும்புங் கொன்றையும்

  வன்னியும் மத்தமுந்

துடும்பல் செய்சடைத்

  தூமணிச் சோதியான்

கடம்பன் தாதை

  கருதுங்காட் டுப்பள்ளி

உடம்பி னார்க்கோர்

  உறுதுணை யாகுமே.  6 

 

 

மெய்யின் மாசுடை

  யாருடல் மூடுவார்

பொய்யை மெய்யென்று

  புக்குடன் வீழன்மின்

கையின் மானுடை

  யான்காட்டுப் பள்ளியெம்

ஐயன் றன்னடி

  யேயடைந் துய்ம்மினே.  7 

 

 

வேலை வென்றகண்

  ணாரை விரும்பிநீர்

சீலங் கெட்டுத்

  திகையன்மின் பேதைகாள்

காலை யேதொழுங்

  காட்டுப்பள் ளியுறை

நீல கண்டனை

  நித்தல் நினைமினே.  8 

 

 

இன்று ளார்நாளை

  இல்லை யெனும்பொருள்

ஒன்று மோரா

  துழிதரும் ஊமர்காள்

அன்று வானவர்க்

  காக விடமுண்ட

கண்ட னார்காட்டுப்

  பள்ளிகண் டுய்ம்மினே.  9 

 

 

எண்ணி லாவரக்

  கன்மலை யேந்திட

எண்ணி நீண்முடி

  பத்து மிறுத்தவன்

கண்ணு ளார்கரு

  துங்காட்டுப் பள்ளியை

நண்ணு வாரவர்

  தம்வினை நாசமே. 10

 

திருச்சிற்றம்பலம்