ஐந்தாம்-திருமுறை

074 விரும்பி யூறு

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : எறும்பியூர்

திருச்சிற்றம்பலம்

 

 

விரும்பி யூறு

  விடேல்மட நெஞ்சமே

கரும்பி னூறல்கண்

  டாய்கலந் தார்க்கவன்

இரும்பி னூறல

  றாததோர் வெண்டலை

எறும்பி யூர்மலை

  யானெங்க ளீசனே.  1 

 

 

பிறங்கு செஞ்சடைப்

  பிஞ்ஞகன் பேணுசீர்க்

கறங்கு பூத

  கணமுடைக் கண்ணுதல்

நறுங்கு ழல்மட

  வாளொடு நாடொறும்

எறும்பி யூர்மலை

  யானெங்க ளீசனே.  2 

 

 

மருந்து வானவர்

  தானவர்க் கின்சுவை

புரிந்த புன்சடைப்

  புண்ணியன் கண்ணுதல்

பொருந்து பூண்முலை

  மங்கைநல் லாளொடும்

எறும்பி யூர்மலை

  யானெங்க ளீசனே.  3 

 

 

நிறங்கொள் கண்டத்து

  நின்மலன் எம்மிறை

மறங்கொள் வேற்கண்ணி

  வாணுதல் பாகமாய்

அறம்பு ரிந்தருள்

  செய்தவெம் அங்கணன்

எறும்பி யூர்மலை

  யானெங்க ளீசனே.  4 

 

 

நறும்பொன் நாண்மலர்க்

  கொன்றையும் நாகமுந்

துறும்பு செஞ்சடைத்

  தூமதி வைத்துவான்

உறும்பொன் மால்வரைப்

  பேதையோ டூர்தொறும்

எறும்பி யூர்மலை

  யானெங்க ளீசனே.  5 

 

 

கறும்பி யூர்வன

  ஐந்துள காயத்தில்

திறம்பி யூர்வன

  மற்றும் பலவுள

குறும்பி யூர்வதோர்

  கூட்டகத் திட்டெனை

எறும்பி யூரரன்

  செய்த இயற்கையே.  6 

 

 

மறந்து மற்றிது

  பேரிடர் நாடொறுந்

திறம்பி நீநினை

  யேல்மட நெஞ்சமே

புறஞ்செய் கோலக்

  குரம்பையி லிட்டெனை

எறும்பி யூரரன்

  செய்த இயற்கையே.  7 

 

 

இன்ப மும்பிறப்

  பும்மிறப் பின்னொடு

துன்ப மும்முட

  னேவைத்த சோதியான்

அன்ப னேயர

  னேயென் றரற்றுவார்க்

கின்ப னாகும்

  எறும்பியூ ரீசனே.  8 

 

 

கண்ணி றைந்த

  கனபவ ளத்திரள்

விண்ணி றைந்த

  விரிசுடர்ச் சோதியான்

உண்ணி றைந்துரு

  வாயுயி ராயவன்

எண்ணி றைந்த

  எறும்பியூ ரீசனே.  9 

 

 

நிறங்கொள் மால்வரை

  ஊன்றி யெடுத்தலும்

நறுங்கு ழல்மட

  வாள்நடுக் கெய்திட

மறங்கொள் வாளரக்

  கன்வலி வாட்டினான்

எறும்பி யூர்மலை

  எம்மிறை காண்மினே. 10

 

திருச்சிற்றம்பலம்