ஐந்தாம்-திருமுறை

057 முன்ன மேநினை

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : கோளிலி

திருச்சிற்றம்பலம்

 

முன்ன மேநினை

  யாதொழிந் தேனுனை

இன்னம் நானுன

  சேவடி யேத்திலேன்

செந்நெ லார்வயல்

  சூழ்திருக் கோளிலி

மன்ன னேயடி

  யேனை மறவலே.  1 

 

 

விண்ணு ளார்தொழு

  தேத்தும் விளக்கினை

மண்ணு ளார்வினை

  தீர்க்கு மருந்தினைப்

பண்ணு ளார்பயி

  லுந்திருக் கோளிலி

அண்ண லாரடி

  யேதொழு துய்ம்மினே.  2 

 

 

நாளும் நம்முடை

  நாள்கள் அறிகிலோம்

ஆளும் நோய்களோ

  ரைம்பதோ டாறெட்டும்

ஏழை மைப்பட்

  டிருந்துநீர் நையாதே

கோளி லியரன்

  பாதமே கூறுமே.  3 

 

 

விழவி னோசை

  ஒலியறாத் தண்பொழில்

பழகி னார்வினை

  தீர்க்கும் பழம்பதி

அழல்கை யானம

  ருந்திருக் கோளிலிக்

குழக னார்திருப்

  பாதமே கூறுமே.  4 

 

 

மூல மாகிய

  மூவர்க்கு மூர்த்தியைக்

கால னாகிய

  காலற்குங் காலனைக்

கோல மாம்பொழில்

  சூழ்திருக் கோளிலிச்

சூல பாணிதன்

  பாதந் தொழுமினே.  5 

 

 

காற்ற னைக்கடல்

  நஞ்சமு துண்டவெண்

ணீற்ற னைநிமிர்

  புன்சடை யண்ணலை

ஆற்ற னையம

  ருந்திருக் கோளிலி

ஏற்ற னாரடி

  யேதொழு தேத்துமே.  6 

 

 

வேத மாயவிண்

  ணோர்கள் தலைவனை

ஓதி மன்னுயி

  ரேத்து மொருவனைக்

கோதி வண்டறை

  யுந்திருக் கோளிலி

வேத நாயகன்

  பாதம் விரும்புமே.  7 

 

 

நீதி யாற்றொழு

  வார்கள் தலைவனை

வாதை யான

  விடுக்கும் மணியினை

கோதி வண்டறை

  யுந்திருக் கோளிலி

வேத நாயகன்

  பாதம் விரும்புமே.  8 

 

 

மாலும் நான்முக

  னாலும் அறிவொணாப்

பாலின் மென்மொழி

  யாளொரு பங்கனைக்

கோல மாம்பொழில்

  சூழ்திருக் கோளிலி

நீல கண்டனை

  நித்தல் நினைமினே.  9 

 

 

அரக்க னாய

  இலங்கையர் மன்னனை

நெருக்கி யம்முடி

  பத்திறுத் தானவற்(கு)

இரக்க மாகிய

  வன்றிருக் கோளிலி

அருத்தி யாயடி

  யேதொழு துய்ம்மினே. 10

 

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

ஸ்ரீ சந்தனு பீலி கிருஷ்ண மகானு பாவுலு சித்தர்
View Details
கல்லானைக்குக் கரும்பு கொடுத்தல்
View Details
முனையடுவார் நாயனார்
View Details