முதல்-திருமுறை

053 தேவராயும் அசுரராயுஞ்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் : முதுகுன்றம்

திருச்சிற்றம்பலம்

 

தேவராயும் அசுரராயுஞ் 

  சித்தர்செழு மறைசேர்

நாவராயும் நண்ணுபாரும் 

  விண்எரிகால் நீரும்

மேவராய விரைமலரோன் 

  செங்கண்மால் ஈசன்என்னும்   

மூவராய முதலொருவன் 

  மேயதுமு துகுன்றே.  1 

 

பற்றுமாகி வானுளோர்க்குப் 

  பல்கதிரோன் மதிபார்

எற்றுநீர் தீக் காலு

  மேலை விண்இயமா னனோடு

மற்றுமாதோர் பல்லுயிராய் 

  மாலயனும் மறைகள் 

முற்றுமாகி வேறுமானான் 

  மேயதுமு துகுன்றே. 2

 

வாரிமாகம் வைகுதிங்கள் 

  வாளரவஞ் சூடி  

நாரிபாகம்2 நயந்துபூமேல் 

  நான்முகன்றன் தலையில் 

சீரிதாகப் பலிகொள்செல்வன் 

  செற்றலுந் தோன்றியதோர்  

மூரிநாகத் துரிவைபோர்த்தான் 

  மேயதுமு துகுன்றே. 3

 

பாடுவாருக் கருளும்எந்தை 

  பனிமுதுபௌ வமுந்நீர்

நீடுபாரும் முழுதுமோடி 

  யண்டர்நிலை கெடலும்

நாடுதானும் ஊடுமோடி 

  ஞாலமும்நான் முகனும்  

ஊடுகாண மூடும்வெள்ளத் 

  துயர்ந்ததுமு துகுன்றே.  4 

 

வழங்குதிங்கள் வன்னிமத்தம் 

  மாசுணம்மீ சணவிச்

செழுங்கல்வேந்தன் செல்விகாணத் 

  தேவர்திசை வணங்கத்

தழங்குமொந்தை தக்கைமிக்க 

  பேய்க்கணம் பூதஞ்சூழ

முழங்குசெந்தீ யேந்தியாடி 

  மேயதுமு துகுன்றே.  5 

 

சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கட் 

  டொல்லரா நல் லிதழி

சழிந்தசென்னிச் சைவவேடந் 

  தான்நினைத்தைம் புலனும்

அழிந்தசிந்தை யந்தணாளர்க் 

  கறம்பொருளின் பம்வீடு

மொழிந்தவாயான் முக்கணாதி 

  மேயதுமு துகுன்றே.  6 

 

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்துபோயிற்று.  7 

 

மயங்கும்மாயம் வல்லராகி 

  வானினொடு நீரும்

இயங்குவோருக் கிறைவனாய 

  இராவணன்தோள் நெரித்த

புயங்கராக மாநடத்தன் 

  புணர்முலைமா துமையாள்

முயங்குமார்பன் முனிவரேத்த 

  மேயதுமு துகுன்றே.  8 

 

ஞாலமுண்ட மாலும்மற்றை 

  நான்முகனும் மறியாக்

கோலமண்டர் சிந்தைகொள்ளா 

  ராயினுங் கொய்மலரால்

ஏலஇண்டை கட்டிநாமம் 

  இசையஎப்போ தும்ஏத்தும்

மூலமுண்ட நீற்றர் வாயான் 

  மேயதுமு துகுன்றே.  9 

 

உறிகொள்கையர் சீவரத்தர் 

  உண்டுழல்மிண்டர் சொல்லை  

நெறிகளென்ன நினைவுறாதே 

  நித்தலுங்கை தொழுமின்

மறிகொள்கையன் வங்கமுந்நீர்ப் 

  பொங்குவிடத் தையுண்ட   

முறிகொள்மேனி மங்கைபங்கன் 

  மேயதுமு துகுன்றே.  10 

 

மொய்த்துவானோர் பல்கணங்கள் 

  வணங்குமு துகுன்றைப் 

பித்தர்வேடம் பெருமையென்னும் 

  பிரமபுரத் தலைவன்

இப்பதிகத்தில் 11-ஆம் செய்யுளில் பின்னிரண்டடிகள்  மறைந்து

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

நரசிங்க முனையரைய நாயனார்
View Details
குறையாத அரிசி மூட்டை அளித்தல்
View Details
மச்ச முனி
View Details