ஐந்தாம்-திருமுறை

036 கான றாத கடிபொழில்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : செம்பொன்பள்ளி

திருச்சிற்றம்பலம்

 

கான றாத

  கடிபொழில் வண்டினந்

தேன றாத

  திருச்செம்பொன் பள்ளியான்

ஊன றாததோர்

  வெண்டலை யிற்பலி

தான றாததோர்

  கொள்கையன் காண்மினே.  1 

 

 

என்பும் ஆமையும்

  பூண்டங் குழிதர்வர்க்

கன்பு மாயிடும்

  ஆயிழை யீரினிச்

செம்பொன் பள்ளியு

  ளான்சிவ லோகனை

நம்பொன் பள்ளியுள்

  கவினை நாசமே.  2 

 

 

வேறு கோலத்தர்

  ஆணலர் பெண்ணலர்

கீறு கோவண

  வைதுகி லாடையர்

தேற லாவதொன்

  றன்றுசெம் பொன்பள்ளி

ஆறு சூடிய

  அண்ணல் அவனையே.  3 

 

 

அருவ ராததோர்

  வெண்டலை யேந்திவந்

திருவ ராயிடு

  வார்கடை தேடுவார்

தெருவெ லாமுழல்

  வார்செம்பொன் பள்ளியார்

ஒருவர் தாம்பல

  பேருளர் காண்மினே.  4 

 

 

பூவு லாஞ்சடை

  மேற்புனல் சூடினான்

ஏவ லாலெயில்

  மூன்றும் எரித்தவன்

தேவர் சென்றிறைஞ்

  சுஞ்செம்பொன் பள்ளியான்

மூவ ராய்முத

  லாய்நின்ற மூர்த்தியே.  5 

 

 

சலவ ராயொரு

  பாம்பொடு தண்மதிக் 

கலவ ராவதன்

  காரண மென்கொலோ

திலக நீண்முடி

  யார்செம்பொன் பள்ளியார்

குலவி லாலெயில்

  மூன்றெய்த கூத்தரே.  6 

 

 

கைகொள் சூலத்தர்

  கட்டுவாங் கத்தினர்

மைகொள் கண்டத்த

  ராகி இருசுடர்

செய்ய மேனிவெண்

  ணீற்றர்செம் பொன்பள்ளி

ஐயர் கையதோர்

  ஐந்தலை நாகமே.  7 

 

 

வெங்கண் நாகம்

  வெருவுற ஆர்த்தவர்

பைங்கண் ஆனையின்

  ஈருரி போர்த்தவர்

செங்கண் மால்விடை

  யார்செம்பொன் பள்ளியார்

அங்க ணாயடைந்

  தார்வினை தீர்ப்பரே.  8 

 

 

நன்றி நாரணன்

  நான்முக னென்றிவர்

நின்ற நீண்முடி

  யோடடி காண்புற்றுச்

சென்று காண்பரி

  யான்செம்பொன் பள்ளியான்

நின்ற சூழலில்

  நீளெரி யாகியே.  9 

 

 

திரியு மும்மதில்

  செங்கணை யொன்றினால்

எரிய வெய்தன

  லோட்டி இலங்கைக்கோன்

நெரிய வூன்றியிட்

  டார்செம்பொன் பள்ளியார்

அரிய வானம்

  அவரருள் செய்வரே. 10

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

பத்திரைக்கு வாதில் வெற்றி அளித்தல்
View Details
உக்கிர பாண்டியன் பிறப்பு
View Details
ஏனாதிநாத நாயனார்
View Details