ஐந்தாம்-திருமுறை

034 கொல்லி யான்குளிர்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : நெய்த்தானம்

திருச்சிற்றம்பலம்

 

கொல்லி யான்குளிர்

  தூங்குகுற் றாலத்தான்

புல்லி யார்புர

  மூன்றெரி செய்தவன்

நெல்லி யானிலை

  யானநெய்த் தானனைச்

சொல்லி மெய்தொழு

  வார்சுடர் வாணரே.  1 

 

 

இரவ னையிடு

  வெண்டலை யேந்தியைப்

பரவ னைப்படை

  யார்மதில் மூன்றையும்

நிரவ னைநிலை

  யானநெய்த் தானனைக்

குரவ னைத்தொழு

  வார்கொடி வாணரே.  2 

 

 

ஆனி டையைந்தும்

  ஆடுவ ராரிருள்

கானி டைநடம்

  ஆடுவர் காண்மினோ

தேனி டைமலர்

  பாயுநெய்த் தானனை

வானி டைத்தொழு

  வார்வலி வாணரே.  3 

 

 

விண்ட வர்புர

  மூன்றும்வெண் ணீறெழக்

கண்ட வன்கடி

  தாகிய நஞ்சினை

உண்ட வன்னொளி

  யானநெய்த் தானனைத்

தொண்ட ராய்த்தொழு

  வார்சுடர் வாணரே.  4 

 

 

முன்கை நோவக்

  கடைந்தவர் நிற்கவே

சங்கி யாது

  சமுத்திர நஞ்சுண்டான்

நங்கை யோடு

  நவின்றநெய்த் தானனைத்

தங்கை யாற்றொழு

  வார்தலை வாணரே.  5 

 

 

சுட்ட நீறுமெய்

  பூசிச் சுடலையுள்

நட்ட மாடுவர்

  நள்ளிருட் பேயொடே

சிட்டர் வானவர்

  தேருநெய்த் தானனை

இட்ட மாய்த்தொழு

  வாரின்ப வாணரே.  6 

 

 

கொள்ளித் தீயெரி

  வீசிக் கொடியதோர்

கள்ளிக் காட்டிடை

  யாடுவர் காண்மினோ

தெள்ளித் தேறித்

  தெளிந்துநெய்த் தானனை

உள்ளத் தாற்றொழு

  வாரும்பர் வாணரே.  7 

 

 

உச்சி மேல்விளங்

  கும்மிள வெண்பிறை

பற்றி யாடர

  வோடுஞ்ச டைப்பெய்தான்

நெற்றி யாரழல்

  கண்டநெய்த் தானனைச்

சுற்றி மெய்தொழு

  வார்சுடர் வாணரே.  8 

 

 

மாலொ டும்மறை

  யோதிய நான்முகன்

காலொ டும்முடி

  காண்பரி தாயினான்

சேலொ டுஞ்செருச்

  செய்யும்நெய்த் தானனை

மாலொ டுந்தொழு

  வார்வினை வாடுமே.  9 

 

 

வலிந்த தோள்வலி

  வாளரக் கன்றனை

நெருங்க நீள்வரை

  யூன்றுநெய்த் தானனார்

புரிந்து கைந்நரம்

  போடிசை பாடலும்

பரிந்த னைப்பணி

  வார்வினை பாறுமே. 10

 

திருச்சிற்றம்பலம்