ஐந்தாம்-திருமுறை

029 நிறைக்க வாலியள்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : ஆவடுதுறை

திருச்சிற்றம்பலம்

 

நிறைக்க வாலியள்

  அல்லளிந் நேரிழை

மறைக்க வாலியள்

  அல்லளிம் மாதராள்

பிறைக்க வாலப்

  பெரும்புனல் ஆவடு

துறைக்க வாலியோ

  டாடிய சுண்ணமே.  1 

 

 

தவள மாமதிச்

  சாயலோர் சந்திரன்

பிளவு சூடிய

  பிஞ்ஞகன் எம்மிறை

அளவு கண்டிலள்

  ஆவடு தண்டுறைக்

களவு கண்டனள்

  ஒத்தனள் கன்னியே.  2 

 

 

பாதி பெண்ணொரு

  பாகத்தன் பன்மறை

ஓதி யென்னுளங்

  கொண்டவன் ஒண்பொருள்

ஆதி ஆவடு

  தண்டுறை மேவிய

சோதி யேசுட

  ரேயென்று சொல்லுமே.  3 

 

 

கார்க்கொள் மாமுகில்

  போல்வதோர் கண்டத்தன்

வார்க்கொள் மென்முலை

  சேர்ந்திறு மாந்திவள்

ஆர்க்கொள் கொன்றையன்

  ஆவடு தண்டுறைத்

தார்க்கு நின்றிவள்

  தாழுமா காண்மினே.  4 

 

 

கருகு கண்டத்தன்

  காய்கதிர்ச் சோதியன்

பருகு பாலமு

  தேயென்னும் பண்பினன்

அருகு சென்றிலள்

  ஆவடு தண்டுறை

ஒருவன் என்னை

  யுடையகோ வென்னுமே.  5 

 

 

குழலுங் கொன்றையுங்

  கூவிள மத்தமுந்

தழலுந் தையலோர்

  பாகமாத் தாங்கினான்

அழகன் ஆவடு

  தண்டுறை யாவெனக்

கழலுங் கைவளை

  காரிகை யாளுக்கே.  6 

 

 

பஞ்சின் மெல்லடிப்

  பாவையோர் பங்கனைத்

தஞ்ச மென்றிறு

  மாந்திவ ளாரையும்

அஞ்சு வாளல்லள்

  ஆவடு தண்டுறை

மஞ்ச னோடிவள்

  ஆடிய மையலே.  7 

 

 

பிறையுஞ் சூடிநற்

  பெண்ணோடா ணாகிய

நிறையு நெஞ்சமும்

  நீர்மையுங் கொண்டவன்

அறையும் பூம்பொழில்

  ஆவடு தண்டுறை

இறைவன் என்னை

  யுடையவன் என்னுமே.  8 

 

 

வையந் தானளந்

  தானும் அயனுமாய்

மெய்யைக் காணலுற்

  றார்க்கழ லாயினான்

ஐயன் ஆவடு

  தண்டுறை யாவெனக்

கையில் வெள்வளை

  யுங்கழல் கின்றதே.  9 

 

 

பக்கம் பூதங்கள்

  பாடப் பலிகொள்வான்

மிக்க வாளரக்

  கன்வலி வீட்டினான்

அக்க ணிந்தவன்

  ஆவடு தண்டுறை

நக்கன் என்னுமிந்

  நாணிலி காண்மினே. 10

 

திருச்சிற்றம்பலம்