ஐந்தாம்-திருமுறை

026 காடு கொண்டரங்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : வன்னியூர்

திருச்சிற்றம்பலம்

 

காடு கொண்டரங்

  காக்கங்குல் வாய்க்கணம்

பாட மாநட

  மாடும் பரமனார்

வாட மானிறங்

  கொள்வர் மணங்கமழ்

மாட மாமதில்

  சூழ்வன்னி யூரரே.  1 

 

 

செங்கண் நாகம்

  அரையது தீத்திரள்

அங்கை யேந்திநின்

  றார்எரி யாடுவர்

கங்கை வார்சடை

  மேலிடங் கொண்டவர்

மங்கை பாகம்வைத்

  தார்வன்னி யூரரே.  2 

 

 

ஞானங் காட்டுவர்

  நன்னெறி காட்டுவர்

தானங் காட்டுவர்

  தம்மடைந் தார்க்கெலாந்

தானங் காட்டித்தன்

  றாளடைந் தார்கட்கு

வானங் காட்டுவர்

  போல்வன்னி யூரரே.  3 

 

 

இம்மை அம்மை

  யெனவிரண் டும்மிவை

மெய்ம்மை தானறி

  யாது விளம்புவர்

மெய்ம்மை யால்நினை

  வார்கள்தம் வல்வினை

வம்மின் தீர்ப்பர்கண்

  டீர்வன்னி யூரரே.  4 

 

 

பிறைகொள் வாணுதற்

  பெய்வளைத் தோளியர்

நிறையைக் கொள்பவர்

  நீறணி மேனியர்

கறைகொள் கண்டத்தர்

  வெண்மழு வாளினர்

மறைகொள் வாய்மொழி

  யார்வன்னி யூரரே.  5 

 

 

திளைக்கும் வண்டொடு

  தேன்படு கொன்றையர்

துளைக்கை வேழத்தர்

  தோலர் சுடர்மதி

முளைக்கு மூரற்

  கதிர்கண்டு நாகம்நா

வளைக்கும் வார்சடை

  யார்வன்னி யூரரே.  6 

 

 

குணங்கொள் தோளெட்டு

  மூர்த்தி இணையடி

இணங்கு வார்கட்

  கினியனு மாய்நின்றான்

வணங்கி மாமலர்

  கொண்டவர் வைகலும்

வணங்கு வார்மனத்

  தார்வன்னி யூரரே.  7 

 

 

இயலு மாலொடு

  நான்முகன் செய்தவம்

முயலிற் காண்பரி

  தாய்நின்ற மூர்த்திதான்

அயலெ லாம்அன்ன

  மேயும்அந் தாமரை

வயலெ லாங்கயல்

  பாய்வன்னி யூரரே.  8 

 

 

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று  9 

 

 

நலங்கொள் பாகனை

  நன்று முனிந்திடா

விலங்கல் கோத்தெடுத்

  தானது மிக்கிட

இலங்கை மன்னன்

  இருபது தோளினை

மலங்க வூன்றிவைத்

  தார்வன்னி யூரரே. 10

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

நக்கீரரைக் காத்தருளல்
View Details
கோச் செங்கட் சோழ நாயனார்
View Details
தேரையர்
View Details