ஐந்தாம்-திருமுறை

020 ஒருவ ராயிரு மூவரு

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : கடம்பூர்

திருச்சிற்றம்பலம்

 

ஒருவ ராயிரு

  மூவரு மாயவன்

குருவ தாய

  குழகன் உறைவிடம்

பருவ ரால்குதி

  கொள்ளும் பழனஞ்சூழ்

கருவ தாங்கடம்

  பூர்க்கரக் கோயிலே.  1 

 

 

வன்னி மத்தம்

  வளரிளந் திங்களோர்

கன்னி யாளைக்

  கதிர்முடி வைத்தவன்

பொன்னின் மல்கு

  புணர்முலை யாளொடும்

மன்னி னான்கடம்

  பூர்க்கரக் கோயிலே.  2 

 

 

இல்லக் கோலமும்

  இந்த இளமையும்

அல்லற் கோலம்

  அறுத்துய வல்லிரே

ஒல்லைச் சென்றடை

  யுங்கடம் பூர்நகர்ச்

செல்வக் கோயில்

  திருக்கரக் கோயிலே.  3 

 

 

வேறு சிந்தை

  யிலாதவர் தீவினை

கூறு செய்த

  குழகன் உறைவிடம்

ஏறு செல்வத்

  திமையவர் தாந்தொழும்

ஆறு சேர்கடம்

  பூர்க்கரக் கோயிலே.  4 

 

 

திங்கள் தங்கிய

  செஞ்சடை மேலுமோர்

மங்கை தங்கும்

  மணாளன் இருப்பிடம்

பொங்கு சேர்மணற்

  புன்னையும் ஞாழலுந்

தெங்கு சேர்கடம்

  பூர்க்கரக் கோயிலே.  5 

 

 

மல்லை ஞாலத்து

  வாழும் உயிர்க்கெலாம்

எல்லை யான

  பிரானார் இருப்பிடங்

கொல்லை முல்லை

  கொழுந்தகை மல்லிகை

நல்ல சேர்கடம்

  பூர்க்கரக் கோயிலே.  6 

 

 

தளரும் வாளர

  வத்தொடு தண்மதி

வளரும் பொற்சடை

  யாற்கிட மாவது

கிளரும் பேரொலி

  கின்னரம் பாட்டறாக்

களரி யார்கடம்

  பூர்க்கரக் கோயிலே.  7 

 

 

உற்றா ராயுற

  வாகி உயிர்க்கெலாம்

பெற்றா ராய

  பிரானார் உறைவிடம்

முற்றார் மும்மதி

  லெய்த முதல்வனார்

கற்றார் சேர்கடம்

  பூர்க்கரக் கோயிலே.  8 

 

 

வெள்ளை நீறணி

  மேனிய வர்க்கெலாம்

உள்ள மாய

  பிரானார் உறைவிடம்

பிள்ளை வெண்பிறை

  சூடிய சென்னியான்

கள்வன் சேர்கடம்

  பூர்க்கரக் கோயிலே.  9 

 

 

பரப்பு நீரிலங்

  கைக்கிறை வன்னவன்

உரத்தி னாலடுக்

  கல்லெடுக் கல்லுற

இரக்க மின்றி

  இறைவிர லாற்றலை

அரக்கி னான்கடம்

  பூர்க்கரக் கோயிலே. 10

 

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

பூசலார் நாயனார்
View Details
வரகுண பாண்டியனின் பழியை ஒழித்தல்
View Details
மானக்கஞ்சாற நாயனார்
View Details