ஐந்தாம்-திருமுறை

009 ஓத மால்கடல்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : மறைக்காடு

திருச்சிற்றம்பலம்

 

ஓத மால்கடல்

  பாவி உலகெலாம்

மாத ரார்வலங்

  கொண்மறைக் காடரைக்

காதல் செய்து

  கருதப் படுமவர்

பாத மேத்தப்

  பறையுநம் பாவமே.  1 

 

 

பூக்குந் தாழை

  புறணி அருகெலாம்

ஆக்கந் தானுடை

  மாமறைக் காடரோ

ஆர்க்குங் காண்பரி

  யீர்அடி யார்தமை

நோக்கிக் காண்பது

  நும்பணி செய்யிலே.  2 

 

 

புன்னை ஞாழல்

  புறணி அருகெலாம்

மன்னி னார்வலங்

  கொண்மறைக் காடரோ

அன்ன மென்னடை

  யாளையொர் பாகமாச்

சின்ன வேடம்

  உகப்பது செல்வமே.  3 

 

 

அட்ட மாமலர்

  சூடி அடும்பொடு

வட்டப் புன்சடை

  மாமறைக் காடரோ

நட்ட மாடியும்

  நான்மறை பாடியும்

இட்ட மாக

  இருக்கும் இடமிதே.  4 

 

 

நெய்த லாம்பல்

  நிறைவயல் சூழ்தரும்

மெய்யி னார்வலங்

  கொண்மறைக் காடரோ

தையல் பாகங்கொண்

  டீர்கவர் புன்சடைப்

பைதல் வெண்பிறை

  பாம்புடன் வைப்பதே.  5 

 

 

துஞ்சும் போதுந்

  துயிலின்றி ஏத்துவார்

வஞ்சின் றிவலங்

  கொண்மறைக் காடரோ

பஞ்சின் மெல்லடிப்

  பாவை பலிகொணர்ந்

தஞ்சி நிற்பதும்

  ஐந்தலை நாகமே  6 

 

 

திருவி னார்செல்வ

  மல்கு விழாவணி

மருவி னார்வலங்

  கொண்மறைக் காடரோ

உருவி னாளுமை

  மங்கையோர் பாகமாய்

மருவி னாய்கங்கை

  யைச்சென்னி தன்னிலே.  7 

 

 

சங்கு வந்தலைக்

  குந்தடங் கானல்வாய்

வங்க மார்வலங்

  கொண்மறைக் காடரோ

கங்கை செஞ்சடை

  வைப்பது மன்றியே

அங்கை யில்லனல்

  ஏந்தல் அழகிதே.  8 

 

 

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போனது.  9 

 

 

குறைக்காட் டான்விட்ட

  தேர்குத்த மாமலை

இறைக்காட் டியெடுத்

  தான்றலை ஈரைந்தும்

மறைக்காட் டானிறை

  ஊன்றலும் வாய்விட்டான்

இறைக்காட் டாயெம்

  பிரானுனை ஏத்தவே. 10

 

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

சித்தர் சாங்கதேவர்
View Details
அஷ்டமா சித்தி உபதேசித்தல்
View Details
கொள்ளார் கோபுரம் காத்தான் சித்தர்
View Details