ஐந்தாம்-திருமுறை

002 பனைக்கை

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

பனைக்கை மும்மத

  வேழ முரித்தவன்

நினைப்ப வர்மனங்

  கோயிலாக் கொண்டவன்

அனைத்தும் வேடமாம்

  அம்பலக் கூத்தனைத்

தினைத்த னைப்பொழு

  தும்மறந் துய்வனோ.  1 

 

 

தீர்த்த னைச்சிவ

  னைச்சிவ லோகனை

மூர்த்தி யைமுத

  லாய ஒருவனைப்

பார்த்த னுக்கருள்

  செய்த சிற்றம்பலக்

கூத்த னைக்கொடி

  யேன்மறந் துய்வனோ.  2 

 

 

கட்டும் பாம்புங்

  கபாலங் கைமான்மறி

இட்ட மாயிடு

  காட்டெரி யாடுவான்

சிட்டர் வாழ்தில்லை

  யம்பலக் கூத்தனை

எட்ட னைப்பொழு

  தும்மறந் துய்வனோ.  3 

 

 

மாணி பால்கறந்

  தாட்டி வழிபட

நீணு லகெலாம்

  ஆளக் கொடுத்தவன்

ஆணி யைச்செம்பொன்

  அம்பலத் துள்நின்ற

தாணு வைத்தமி

  யேன்மறந் துய்வனோ.  4 

 

 

பித்த னைப்பெருங்

  காடரங் காவுடை

முத்த னைமுளை

  வெண்மதி சூடியைச்

சித்த னைச்செம்பொன்

  அம்பலத் துள்நின்ற

அத்த னையடி

  யேன்மறந் துய்வனோ.  5 

 

 

நீதி யைநிறை

  வைமறை நான்குடன்

ஓதி யையொரு

  வர்க்கு மறிவொணாச்

சோதி யைச்சுடர்ச்

  செம்பொனின் அம்பலத்

தாதி யையடி

  யேன்மறந் துய்வனோ.  6 

 

 

மைகொள் கண்டனெண் டோ

  ளன்முக் கண்ணினன்

பைகொள் பாம்பரை

  யார்த்த பரமனார்

செய்ய மாதுறை

  சிற்றம்ப லத்தெங்கள்

ஐய னையடி

  யேன்மறந் துய்வனோ.  7 

 

 

முழுதும் வானுல

  கத்துள தேவர்கள்

தொழுதும் போற்றியுந்

  தூயசெம் பொன்னினால்

எழுதி மேய்ந்தசிற்

  றம்பலக் கூத்தனை

இழுதை யேன்மறந்

  தெங்ஙனம் உய்வனோ.  8 

 

 

காரு லாமலர்க்

  கொன்றையந் தாரனை

வாரு லாமுலை

  மங்கை மணாளனைத்

தேரு லாவிய

  தில்லையுட் கூத்தனை

ஆர்கி லாவமு

  தைமறந் துய்வனோ.  9 

 

 

ஓங்கு மால்வரை

  ஏந்தலுற் றான்சிரம்

வீங்கி விம்முற

  ஊன்றிய தாளினான்

தேங்கு நீர்வயல்

  சூழ்தில்லைக் கூத்தனைப்

பாங்கி லாத்தொண்ட

  னேன்மறந் துய்வனோ. 10

 

திருச்சிற்றம்பலம்