நான்காம்-திருமுறை

112 வெள்ளிக் குழைத்துணி

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : பொது

திருச்சிற்றம்பலம்

 

வெள்ளிக் குழைத்துணி போலுங் 

  கபாலத்தன் வீழ்ந்திலங்கு

வெள்ளிப் புரியன்ன வெண்புரி 

  நூலன் விரிசடைமேல்

வெள்ளித் தகடன்ன வெண்பிறை 

  சூடிவெள் ளென்பணிந்து

வெள்ளிப் பொடிப்பவ ளப்புறம் 

  பூசிய வேதியனே.  1 

 

 

உடலைத் துறந்துல கேழுங் 

  கடந்துல வாததுன்பக்

கடலைக் கடந்துய்யப் போயிட 

  லாகுங் கனகவண்ணப்

படலைச் சடைப்பர வைத்திரைக் 

  கங்கை பனிப்பிறைவெண்

சுடலைப் பொடிக்கட வுட்கடி 

  மைக்கண் துணிநெஞ்சமே.  2 

 

 

முன்னே யுரைத்தால் முகமனே 

  யொக்குமிம் மூவுலகுக்

கன்னையும் அத்தனு மாவா 

  யழல்வணா நீயலையோ

உன்னை நினைந்தே கழியுமென் 

  னாவி கழிந்ததற்பின்

என்னை மறக்கப் பெறாயெம் 

  பிரானுன்னை வேண்டியதே.  3 

 

 

நின்னையெப் போது நினையலொட் 

  டாய்நீ நினையப்புகிற்

பின்னையப் போதே மறப்பித்துப் 

  பேர்த்தொன்று நாடுவித்தி

உன்னையெப் போதும் மறந்திட் 

  டுனக்கினி தாயிருக்கும்

என்னையொப் பாருள ரோசொல்லு 

  வாழி இறையவனே.  4 

 

 

முழுத்தழல் மேனித் தவளப் 

  பொடியன் கனகக்குன்றத்

தெழிற்பெருஞ் சோதியை எங்கள் 

  பிரானை யிகழ்ந்திர்கண்டீர்

தொழப்படுந் தேவர் தொழப்படு 

  வானைத் தொழுதபின்னை

தொழப்படுந் தேவர்தம் மால்தொழு 

  விக்குந்தன் தொண்டரையே.  5 

 

 

விண்ணகத் தான்மிக்க வேதத் 

  துளான்விரி நீருடுத்த

மண்ணகத் தான்திரு மாலகத் 

  தான்மரு வற்கினிய

பண்ணகத் தான்பத்தர் சித்தத் 

  துளான்பழ நாயடியேன்

கண்ணகத் தான்மனத் தான்சென்னி 

  யானெங் கறைக்கண்டனே.  6 

 

 

பெருங்கடல் மூடிப் பிரளயங் 

  கொண்டு பிரமனும்போய்

இருங்கடல் மூடி இறக்கும் 

  இறந்தான் களேபரமுங்

கருங்கடல் வண்ணன் களேபர 

  முங்கொண்டு கங்காளராய்

வருங்கடல் மீளநின் றெம்மிறை 

  நல்வீணை வாசிக்குமே.  7 

 

 

வானந் துளங்கிலென் மண்கம்ப 

  மாகிலென் மால்வரையுந்

தானந் துளங்கித் தலைதடு 

  மாறிலென் தண்கடலும்

மீனம் படிலென் விரிசுடர் 

  வீழிலென் வேலைநஞ்சுண்

டூனமொன் றில்லா ஒருவனுக் 

  காட்பட்ட உத்தமர்க்கே.  8 

 

 

சிவனெனும் நாமந் தனக்கே 

  யுடையசெம் மேனியெம்மான்

அவனெனை ஆட்கொண் டளித்திடு 

  மாகில் அவன்றனையான்

பவனெனு நாமம் பிடித்துத் 

  திரிந்துபன் னாளழைத்தால்

இவனெனைப் பன்னாள் அழைப்பொழி 

  யானென் றெதிர்ப்படுமே.  9 

 

 

என்னையொப் பாருன்னை எங்ஙனம் 

  காண்பர் இகலியுன்னை

நின்னையொப் பார்நின்னைக் காணும் 

  படித்தன்று நின்பெருமை

பொன்னையொப் பாரித் தழலை 

  வளாவிச்செம் மானஞ்செற்று

மின்னையொப் பார மிளிருஞ் 

  சடைக்கற்றை வேதியனே.  10 

திருச்சிற்றம்பலம்