நான்காம்-திருமுறை

107 மருட்டுயர் தீரவன்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : கடவூர் வீரட்டம்

திருச்சிற்றம்பலம்

 

மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த 

  மாணிமார்க் கண்டேயற்காய்

இருட்டிய மேனி வளைவாள் 

  எயிற்றெரி போலுங்குஞ்சிச்

சுருட்டிய நாவில்வெங் கூற்றம் 

  பதைப்ப வுதைத்துங்ஙனே

உருட்டிய சேவடி யான்கட 

  வூருறை உத்தமனே.  1 

 

 

பதத்தெழு மந்திரம் அஞ்செழுத் 

  தோதிப் பரிவினொடும்

இதத்தெழு மாணிதன் இன்னுயிர் 

  உண்ண வெகுண்டடர்த்த

கதத்தெழு காலனைக் கண்குரு 

  திப்புன லாறொழுக

உதைத்தெழு சேவடி யான்கட 

  வூருறை உத்தமனே.  2 

 

 

கரப்புறு சிந்தையர் காண்டற் 

  கரியவன் காமனையும்

நெருப்புமிழ் கண்ணினன் நீள்புனற் 

  கங்கையும் பொங்கரவும்

பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன் 

  காலனைப் பண்டொருகால்

உரப்பிய சேவடி யான்கட 

  வூருறை உத்தமனே.  3 

 

 

மறித்திகழ் கையினன் வானவர் 

  கோனை மனமகிழ்ந்து

குறித்தெழு மாணிதன் ஆருயிர் 

  கொள்வான் கொதித்தசிந்தைக்

கறுத்தெழு மூவிலை வேலுடைக் 

  காலனைத் தானலற

உறுக்கிய சேவடி யான்கட 

  வூருறை உத்தமனே.  4 

 

 

குழைத்திகழ் காதினன் வானவர் 

  கோனைக் குளிர்ந்தெழுந்து

பழக்கமொ டர்ச்சித்த மாணிதன் 

  ஆருயிர் கொள்ளவந்த

தழற்பொதி மூவிலை வேலுடைக் 

  காலனைத் தானலற

உழக்கிய சேவடி யான்கட 

  வூருறை உத்தமனே.  5 

 

 

பாலனுக் காயன்று பாற்கடல் 

  ஈந்து பணைத்தெழுந்த

ஆலினிற் கீழிருந் தாரண 

  மோதி அருமுனிக்காய்ச்

சூலமும் பாசமுங் கொண்டு 

  தொடர்ந்தடர்ந் தோடிவந்த

காலனைக் காய்ந்த பிரான்கட 

  வூருறை உத்தமனே.  6 

 

 

படர்சடைக் கொன்றையும் பன்னக 

  மாலை பணிகயிறா

உடைதலைக் கோத்துழல் மேனியன் 

  உண்பலிக் கென்றுழல்வோன்

சுடர்பொதி மூவிலை வேலுடைக் 

  காலனைத் துண்டமதா

உடறிய சேவடி யான்கட 

  வூருறை உத்தமனே.  7 

 

 

வெண்டலை மாலையுங் கங்கைக் 

  கரோடி விரிசடைமேற்

பெண்டனி நாயகன் பேயுகந் 

  தாடும் பெருந்தகையான்

கண்டனி நெற்றியன் காலனைக் 

  காய்ந்து கடலின்விடம்

உண்டருள் செய்தபி ரான்கட 

  வூருறை உத்தமனே.  8 

 

 

கேழல தாகிக் கிளறிய 

  கேசவன் காண்பரிதாய்

வாழிநன் மாமலர்க் கண்ணிடந் 

  திட்டவம் மாலவற்கன்

றாழியும் ஈந்து அடுதிறற் 

  காலனை அன்றடர்த்து

ஊழியு மாய பிரான்கட 

  வூருறை உத்தமனே.  9 

 

 

தேன்றிகழ் கொன்றையுங் கூவிள

  மாலை திருமுடிமேல்

ஆன்றிகழ் ஐந்துகந் தாடும் 

  பிரான்மலை ஆர்த்தெடுத்த

கூன்றிகழ் வாளரக் கன்முடி 

  பத்துங் குலைந்துவிழ

ஊன்றிய சேவடி யான்கட 

  வூருறை உத்தமனே. 10

 

திருச்சிற்றம்பலம்