நான்காம்-திருமுறை

094 ஈன்றாளு மாயெனக்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : பாதிரிப்புலியூர்

திருச்சிற்றம்பலம்

 

ஈன்றாளு மாயெனக் கெந்தையு 

  மாயுடன் தோன்றினராய்

மூன்றா யுலகம் படைத்துகந் 

  தான்மனத் துள்ளிருக்க

ஏன்றான் இமையவர்க் கன்பன் 

  திருப்பா திரிப்புலியூர்த்

தோன்றாத் துணையா யிருந்தனன் 

  றன்னடி யோங்களுக்கே.  1 

 

 

பற்றாய் நினைந்திடப் போதுநெஞ் 

  சேயிந்தப் பாரைமுற்றுஞ்

சுற்றாய் அலைகடல் மூடினுங் 

  கண்டேன் புகல்நமக்கு

உற்றான் உமையவட் கன்பன் 

  திருப்பா திரிப்புலியூர்

முற்றா முளைமதிக் கண்ணியி 

  னான்றன மொய்கழலே.  2 

 

 

விடையான் விரும்பியென் னுள்ளத் 

  திருந்தான் இனிநமக்கிங்

கடையா அவலம் அருவினை 

  சாரா நமனையஞ்சோம்

புடையார் கமலத் தயன்போல் 

  பவர்பா திரிப்புலியூர்

உடையான் அடியார் அடியடி 

  யோங்கட் கரியதுண்டே.  3 

 

 

மாயமெல் லாமுற்ற விட்டிருள் 

  நீங்க மலைமகட்கே

நேயம் நிலாவ இருந்தா 

  னவன்றன் திருவடிக்கே

தேயமெல் லாநின் றிறைஞ்சுந் 

  திருப்பா திரிப்புலியூர்

மேயநல் லான்மலர்ப் பாதமென் 

  சிந்தையுள் நின்றனவே.  4 

 

 

வைத்த பொருள்நமக் காமென்று 

  சொல்லி மனத்தடைத்துச்

சித்த மொருக்கிச் சிவாய 

  நமவென் றிருக்கினல்லால்

மொய்த்த கதிர்மதி போல்வா 

  ரவர்பா திரிப்புலியூர்

அத்தன் அருள்பெற லாமோ 

  அறிவிலாப் பேதைநெஞ்சே.  5 

 

 

கருவாய்க் கிடந்துன் கழலே 

  நினையுங் கருத்துடையேன்

உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் 

  பயின்றேன் உனதருளாற்

திருவாய் பொலியச் சிவாய 

  நமவென்று நீறணிந்தேன்

தருவாய் சிவகதி நீபா 

  திரிப்புலி யூரரனே.  6 

 

 

எண்ணா தமரர் இரக்கப் 

  பரவையுள் நஞ்சமுண்டாய்

திண்ணார் அசுரர் திரிபுரந் 

  தீயெழச் செற்றவனே

பண்ணார்ந் தமைந்த பொருள்கள் 

  பயில்பா திரிப்புலியூர்க்

கண்ணார் நுதலாய் கழல்நங் 

  கருத்தில் உடையனவே.  7 

 

 

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா 

  வுன்னடி யென்மனத்தே

வழுவா திருக்க வரந்தர 

  வேண்டுமிவ் வையகத்தே

தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் 

  செய்பா திரிப்புலியூர்ச்

செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை 

  மேல்வைத்த தீவண்ணனே.  8 

 

 

மண்பா தலம்புக்கு மால்கடல் 

  மூடிமற் றேழுலகும்

விண்பால் திசைகெட் டிருசுடர் 

  வீழினும் அஞ்சல்நெஞ்சே

திண்பால் நமக்கொன்று கண்டோ ந் 

  திருப்பா திரிப்புலியூர்க்

கண்பாவு நெற்றிக் கடவுட் 

  சுடரான் கழலிணையே.  9 

 

 

திருந்தா அமணர்தந் தீநெறிப் 

  பட்டுத் திகைத்துமுத்தி

தருந்தா ளிணைக்கே சரணம் 

  புகுந்தேன் வரையெடுத்த

பொருந்தா அரக்கன் உடல்நெரித் 

  தாய்பா திரிப்புலியூர்

இருந்தாய் அடியேன் இனிப்பிற 

  வாமல்வந் தேன்றுகொள்ளே. 10

 

 

திருச்சிற்றம்பலம்