நான்காம்-திருமுறை

087 மேவித்து நின்று

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : பழனம்

திருச்சிற்றம்பலம்

 

மேவித்து நின்று விளைந்தன 

  வெந்துயர் துக்கமெல்லாம்

ஆவித்து நின்று கழிந்தன 

  அல்லல் அவையறுப்பான்

பாவித்த பாவனை நீயறி 

  வாய்பழ னத்தரசே

கூவித்துக் கொள்ளுந் தனையடி 

  யேனைக் குறிக்கொள்வதே.  1 

 

 

சுற்றிநின் றார்புறங் காவ 

  லமரர் கடைத்தலையில்

மற்றுநின் றார்திரு மாலொடு 

  நான்முகன் வந்தடிக்கீழ்ப்

பற்றிநின் றார்பழ னத்தர 

  சேயுன் பணியறிவான்

உற்றுநின் றாரடி யேனைக் 

  குறிக்கொண் டருளுவதே.  2 

 

 

ஆடிநின் றாயண்டம் ஏழுங் 

  கடந்துபோய் மேலவையுங்

கூடிநின் றாய்குவி மென்முலை 

  யாளையுங் கொண்டுடனே

பாடிநின் றாய்பழ னத்தர 

  சேயங்கொர் பால்மதியஞ்

சூடிநின் றாயடி யேனையஞ் 

  சாமைக் குறிக்கொள்வதே.  3 

 

 

எரித்துவிட் டாய்அம்பி னாற்புர 

  மூன்றுமுன் னேபடவும்

உரித்துவிட் டாய்உமை யாள்நடுக் 

  கெய்தவொர் குஞ்சரத்தைப்

பரித்துவிட் டாய்பழ னத்தர 

  சேகங்கை வார்சடைமேற்

தரித்துவிட் டாயடி யேனைக் 

  குறிக்கொண் டருளுவதே.  4 

 

 

முன்னியும் முன்னி முளைத்தன 

  மூவெயி லும்முடனே

மன்னியு மங்கும் இருந்தனை 

  மாய மனத்தவர்கள்

பன்னிய நூலின் பரிசறி 

  வாய்பழ னத்தரசே

உன்னியும் உன்னடி யேனைக் 

  குறிக்கொண் டருளுவதே.  5 

 

 

ஏய்ந்தறுத் தாய்இன்ப னாய்இருந் 

  தேபடைத் தான்றலையைக்

காய்ந்தறுத் தாய்கண்ணி னாலன்று 

  காமனைக் காலனையும்

பாய்ந்தறுத் தாய்பழ னத்தர 

  சேயென் பழவினைநோய்

ஆய்ந்தறுத் தாயடி யேனைக் 

  குறிக்கொண் டருளுவதே.  6 

 

 

மற்றுவைத் தாயங்கோர் மாலொரு 

  பாகம் மகிழ்ந்துடனே

உற்றுவைத் தாய்உமை யாளொடுங் 

  கூடும் பரிசெனவே

பற்றிவைத் தாய்பழ னத்தர 

  சேயங்கொர் பாம்பொருகை

சுற்றிவைத் தாய்அடி யேனைக் 

  குறிக்கொண் டருளுவதே.  7 

 

 

ஊரினின் றாய்ஒன்றி நின்றுவிண் 

  டாரையும் ஒள்ளழலாற்

போரினின் றாய்பொறை யாயுயி 

  ராவி சுமந்துகொண்டு

பாரிநின் றாய்பழ னத்தர 

  சேபணி செய்பவர்கட்

காரநின் றாய்அடி யேனைக் 

  குறிக்கொண் டருளுவதே.  8 

 

 

போகம்வைத் தாய்புரி புன்சடை 

  மேலொர் புனலதனை

ஆகம்வைத் தாய்மலை யான்மட 

  மங்கை மகிழ்ந்துடனே

பாகம்வைத் தாய்பழ னத்தர 

  சேயுன் பணியருளால்

ஆகம்வைத் தாய்அடி யேனைக் 

  குறிக்கொண் டருளுவதே.  9 

 

 

அடுத்திருந் தாய்அரக் கன்முடி 

  வாயொடு தோள்நெரியக்

கெடுத்திருந் தாய்கிளர்ந் தார்வலி 

  யைக்கிளை யோடுடனே

படுத்திருந் தாய்பழ னத்தர 

  சேபுலி யின்னுரிதோல்

உடுத்திருந் தாய்அடி யேனைக் 

  குறிக்கொண் டருளுவதே. 10

 

திருச்சிற்றம்பலம்