நான்காம்-திருமுறை

085 காலை யெழுந்து

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : சோற்றுத்துறை

திருச்சிற்றம்பலம்

 

காலை யெழுந்து கடிமலர் 

  தூயன தாங்கொணர்ந்து

மேலை யமரர் விரும்பு 

  மிடம்விரை யான்மலிந்த

சோலை மணங்கமழ் சோற்றுத் 

  துறையுறை வார்சடைமேல்

மாலை மதியமன் றோவெம் 

  பிரானுக் கழகியதே.  1 

 

 

வண்டணை கொன்றையும் வன்னியும் 

  மத்தமும் வாளரவுங்

கொண்டணைந் தேறு முடியுடை 

  யான்குரை சேர்கழற்கே

தொண்டணைந் தாடிய சோற்றுத் 

  துறையுறை வார்சடைமேல்

வெண்டலை மாலையன் றோவெம் 

  பிரானுக் கழகியதே.  2 

 

 

அளக்கு நெறியினன் அன்பர்கள் 

  தம்மனத் தாய்ந்துகொள்வான்

விளக்கு மடியவர் மேல்வினை 

  தீர்த்திடும் விண்ணவர்கோன்

துளக்குங் குழையணி சோற்றுத் 

  துறையுறை வார்சடைமேற்

றிளைக்கும் மதியமன் றோவெம் 

  பிரானுக் கழகியதே.  3 

 

 

ஆய்ந்தகை வாளர வத்தொடு 

  மால்விடை யேறியெங்கும்

பேர்ந்தகை மானட மாடுவர் 

  பின்னு சடையிடையே

சேர்ந்தகைம் மாமலர் துன்னிய 

  சோற்றுத் துறையுறைவார்

ஏந்துகைச் சூல மழுவெம் 

  பிரானுக் கழகியதே.  4 

 

 

கூற்றைக் கடந்ததுங் கோளர 

  வார்த்ததுங் கோளுழுவை

நீற்றில் துதைந்து திரியும் 

  பரிசது நாமறியோம்

ஆற்றிற் கிடந்தங் கலைப்ப 

  அலைப்புண் டசைந்ததொக்குஞ்

சோற்றுத் துறையுறை வார்சடை 

  மேலதொர் தூமதியே.  5 

 

 

வல்லாடி நின்று வலிபேசு 

  வார்கோளர் வல்லசுரர்

கொல்லாடி நின்று குமைக்கிலும் 

  வானவர் வந்திறைஞ்சச்

சொல்லாடி நின்று பயில்கின்ற 

  சோற்றுத் துறையுறைவார்

வில்லாடி நின்ற நிலையெம் 

  பிரானுக் கழகியதே.  6 

 

 

ஆய முடையது நாமறி 

  யோம்அர ணத்தவரைக்

காயக் கணைசிலை வாங்கியு 

  மெய்துந் துயக்கறுத்தான்

தூயவெண் ணீற்றினன் சோற்றுத் 

  துறையுறை வார்சடைமேற்

பாயும்வெண் ணீர்த்திரைக் கங்கையெம் 

  மானுக் கழகியதே.  7 

 

 

அண்டர் அமரர் கடைந் 

  தெழுந் தோடிய நஞ்சதனை

உண்டும் அதனை ஒடுக்க 

  வல்லான் மிக்க உம்பர்கள்கோன்

தொண்டு பயில்கின்ற சோற்றுத் 

  துறையுறை வார்சடைமேல்

இண்டை மதியமன் றோவெம் 

  பிரானுக் கழகியதே.  8 

 

 

கடல்மணி வண்ணன் கருதிய 

  நான்முகன் றானறியான்

விடமணி கண்ட முடையவன் 

  றானெனை ஆளுடையான்

சுடரணிந் தாடிய சோற்றுத் 

  துறையுறை வார்சடைமேற்

படமணி நாகமன் றோவெம் 

  பிரானுக் கழகியதே.  9 

 

 

இலங்கைக் கிறைவன் இருபது 

  தோளு முடிநெரியக்

கலங்க விரலினா லூன்றி 

  அவனைக் கருத்தழித்த

துலங்கல் மழுவினன் சோற்றுத் 

  துறையுறை வார்சடைமேல்

இலங்கு மதியமன் றோவெம் 

  பிரானுக் கழகியதே. 10

 

திருச்சிற்றம்பலம்