நான்காம்-திருமுறை

082 பார்கொண்டு மூடிக்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : சீர்காழி - 12-கழுமலம்

திருச்சிற்றம்பலம்

 

பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட 

  ஞான்றுநின் பாதமெல்லாம்

நாலஞ்சு புள்ளினம் ஏந்தின 

  என்பர் நளிர்மதியங்

கால்கொண்ட வண்கைச் சடைவிரித் 

  தாடுங் கழுமலவர்க்

காளன்றி மற்றுமுண் டோ அந்த 

  ணாழி அகலிடமே.  1 

 

 

கடையார் கொடிநெடு மாடங்க 

  ளெங்குங் கலந்திலங்க

உடையா னுடைதலை மாலையுஞ் 

  சூடி உகந்தருளி

விடைதா னுடையவவ் வேதியன் 

  வாழுங் கழுமலத்துள்

அடைவார் வினைக ளவையெள்க 

  நாடொறும் ஆடுவரே.  2 

 

 

திரைவாய்ப் பெருங்கடல் முத்தங் 

  குவிப்ப முகந்துகொண்டு

நுரைவாய் நுளைச்சிய ரோடிக் 

  கழுமலத் துள்ளழுந்தும்

விரைவாய் நறுமலர் சூடிய 

  விண்ணவன் றன்னடிக்கே

வரையாப் பரிசிவை நாடொறும் 

  நந்தமை யாள்வனவே.  3 

 

 

விரிக்கும் அரும்பதம் வேதங்க 

  ளோதும் விழுமியநூல்

உரைக்கில் அரும்பொருள் உள்ளுவர் 

  கேட்கில் உலகமுற்றும்

இரிக்கும் பறையொடு பூதங்கள் 

  பாடக் கழுமலவன்

நிருத்தம் பழம்படி யாடுங் 

  கழல்நம்மை ஆள்வனவே.  4 

 

 

சிந்தித் தெழுமன மேநினை 

  யாமுன் கழுமலத்தைப்

பந்தித்த வல்வினை தீர்க்க 

  வல்லானைப் பசுபதியைச்

சந்தித்த கால மறுத்துமென் 

  றெண்ணி யிருந்தவர்க்கு

முந்தித் தொழுகழல் நாடொறும் 

  நந்தம்மை ஆள்வனவே.  5 

 

 

நிலையும் பெருமையும் நீதியுஞ் 

  சால அழகுடைத்தாய்

அலையும் பெருவெள்ளத் தன்று 

  மிதந்தவித் தோணிபுரஞ்

சிலையில் திரிபுரம் மூன்றெரித் 

  தார்தங் கழுமலவர்

அலருங் கழலடி நாடொறும் 

  நந்தமை ஆள்வனவே.  6 

 

 

முற்றிக் கிடந்துமுந் நீரின் 

  மிதந்துடன் மொய்த்தமரர்

சுற்றிக் கிடந்து தொழப்படு 

  கின்றது சூழரவந்

தெற்றிக் கிடந்துவெங் கொன்றளந் 

  துன்றிவெண் திங்கள்சூடுங்

கற்றைச் சடைமுடி யார்க்கிட 

  மாய கழுமலமே.  7 

 

 

உடலும் உயிரும் ஒருவழிச் 

  செல்லும் உலகத்துள்ளே

அடையும் உனைவந் தடைந்தார் 

  அமரர் அடியிணைக்கீழ்

நடையும் விழவொடு நாடொறும் 

  மல்கும் கழுமலத்துள்

விடையன் தனிப்பதம் நாடொறும் 

  நந்தமை ஆள்வனவே.  8 

 

 

பரவைக் கடல்நஞ்ச முண்டது 

  மில்லையிப் பார்முழுதும்

நிரவிக் கிடந்து தொழப்படு 

  கின்றது நீண்டிருவர்

சிரமப் படவந்து சார்ந்தார் 

  கழலடி காண்பதற்கே

அரவக் கழலடி நாடொறும் 

  நந்தமை ஆள்வனவே.  9 

 

 

கரையார் கடல்சூழ் இலங்கையர் 

  கோன்றன் முடிசிதறத்

தொலையா மலரடி ஊன்றலும் 

  உள்ளம் விதிர்விதிர்த்துத்

தலையாய்க் கிடந்துயர்ந் தான்றன் 

  கழுமலங் காண்பதற்கே

அலையாப் பரிசிவை நாடொறும் 

  நந்தமை ஆள்வனவே. 10

 

திருச்சிற்றம்பலம்