நான்காம்-திருமுறை

071 மனைவிதாய் தந்தை

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : நாகைக்காரோணம்

திருச்சிற்றம்பலம்

 

மனைவிதாய் தந்தை மக்கள் 

  மற்றுள சுற்ற மென்னும்

வினையுளே விழுந்த ழுந்தி 

  வேதனைக் கிடமா காதே

கனையுமா கடல்சூழ் நாகை 

  மன்னுகா ரோணத் தானை

நினையுமா வல்லீ ராகில் 

  உய்யலாம் நெஞ்சி னீரே.  1 

 

 

வையனை வைய முண்ட 

  மாலங்கந் தோண்மேற் கொண்ட

செய்யனைச் செய்ய போதிற் 

  திசைமுகன் சிரமொன் றேந்துங்

கையனைக் கடல்சூழ் நாகைக் 

  காரோணங் கோயில் கொண்ட

ஐயனை நினைந்த நெஞ்சே 

  அம்மநாம் உய்ந்த வாறே.  2 

 

 

நிருத்தனை நிமலன் றன்னை 

  நீணிலம் விண்ணின் மிக்க

விருத்தனை வேத வித்தை 

  விளைபொருள் மூல மான

கருத்தனைக் கடல்சூழ் நாகைக் 

  காரோணங் கோயில் கொண்ட

ஒருத்தனை உணர்த லால்நாம் 

  உய்ந்தவா நெஞ்சி னீரே.  3 

 

 

மண்டனை இரந்து கொண்ட 

  மாயனோ டசுரர் வானோர்

தெண்டிரை கடைய வந்த 

  தீவிடந் தன்னை யுண்ட

கண்டனைக் கடல்சூழ் நாகைக் 

  காரோணங் கோயில் கொண்ட

அண்டனை நினைந்த நெஞ்சே 

  அம்மநாம் உய்ந்த வாறே.  4 

 

 

நிறைபுனல் அணிந்த சென்னி 

  நீணிலா அரவஞ் சூடி

மறையொலி பாடி யாடல் 

  மயானத்து மகிழ்ந்த மைந்தன்

கறைமலி கடல்சூழ் நாகைக் 

  காரோணங் கோயில் கொண்ட

இறைவனை நாளு மேத்த 

  இடும்பைபோய் இன்ப மாமே.  5 

 

 

வெம்பனைக் கருங்கை யானை 

  வெருவவன் றுரிவை போர்த்த

கம்பனைக் காலற் காய்ந்த 

  காலனை ஞால மேத்தும்

உம்பனை உம்பர் கோனை 

  நாகைக்கா ரோண மேய

செம்பொனை நினைந்த நெஞ்சே 

  திண்ணம்நாம் உய்ந்த வாறே.  6 

 

 

வெங்கடுங் கானத் தேழை 

  தன்னொடும் வேட னாய்ச்சென்

றங்கமர் மலைந்து பார்த்தற் 

  கடுசரம் அருளி னானை

மங்கைமார் ஆட லோவா 

  மன்னுகா ரோணத் தானைக்

கங்குலும் பகலுங் காணப் 

  பெற்றுநாங் களித்த வாறே.  7 

 

 

தெற்றினர் புரங்கள் மூன்றுந் 

  தீயினில் விழவோ ரம்பால்

செற்றவெஞ் சிலையர் வஞ்சர் 

  சிந்தையுட் சேர்வி லாதார்

கற்றவர் பயிலும் நாகைக் 

  காரோணங் கருதி யேத்தப்

பெற்றவர் பிறந்தார் மற்றுப் 

  பிறந்தவர் பிறந்தி லாரே.  8 

 

 

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  9 

 

 

கருமலி கடல்சூழ் நாகைக் 

  காரோணர் கமல பாதத்

தொருவிரல் நுதிக்கு நில்லா 

  தொண்டிறல் அரக்க னுக்கான்

இருதிற மங்கை மாரோ 

  டெம்பிரான் செம்பொ னாகந்

திருவடி தரித்து நிற்கத் 

  திண்ணம்நாம் உய்ந்த வாறே 10

 

திருச்சிற்றம்பலம்