நான்காம்-திருமுறை

070 முற்றுணை யாயி

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : நனிபள்ளி

திருச்சிற்றம்பலம்

 

முற்றுணை யாயி னானை 

  மூவர்க்கு முதல்வன் றன்னைச்

சொற்றுணை ஆயி னானைச் 

  சோதியை ஆத ரித்து

உற்றுணர்ந் துருகி யூறி 

  உள்கசி வுடைய வர்க்கு

நற்றுணை யாவர் போலும் 

  நனிபள்ளி அடிக ளாரே.  1 

 

 

புலர்ந்தகால் பூவும் நீருங் 

  கொண்டடி போற்ற மாட்டா

வலஞ்செய்து வாயின் நூலால் 

  வட்டணைப் பந்தர் செய்த

சிலந்தியை அரைய னாக்கிச் 

  சீர்மைகள் அருள வல்லார்

நலந்திகழ் சோலை சூழ்ந்த 

  நனிபள்ளி அடிக ளாரே.  2 

 

 

எண்பதும் பத்தும் ஆறு 

  மென்னுளே இருந்து மன்னிக்

கண்பழக் கொன்று மின்றிக் 

  கலக்கநான் அலக்க ழிந்தேன்

செண்பகந் திகழும் புன்னை 

  செழுந்திரட் குரவம் வேங்கை

நண்புசெய் சோலை சூழ்ந்த 

  நனிபள்ளி அடிக ளாரே.  3 

 

 

பண்ணினார் பாட லாகிப் 

  பழத்தினில் இரத மாகிக்

கண்ணினார் பார்வை யாகிக் 

  கருத்தொடு கற்ப மாகி

எண்ணினார் எண்ண மாகி 

  ஏழுல கனைத்து மாகி

நண்ணினார் வினைகள் தீர்ப்பார் 

  நனிபள்ளி அடிக ளாரே.  4 

 

 

துஞ்சிருள் காலை மாலை 

  தொடர்ச்சியை மறந் திராதே

அஞ்செழுத் தோதின் நாளும் 

  அரனடிக் கன்ப தாகும்

வஞ்சனைப் பால்சோ றாக்கி 

  வழக்கிலா அமணர் தந்த

நஞ்சமு தாக்கு வித்தார் 

  நனிபள்ளி அடிக ளாரே.  5 

 

 

செம்மலர்க் கமலத் தோனுந் 

  திருமுடி காண மாட்டான்

அம்மலர்ப் பாதங் காண்பான் 

  ஆழியான் அகழ்ந்துங் காணான்

நின்மலன் என்றங் கேத்தும் 

  நினைப்பினை அருளி நாளும்

நம்மலம் அறுப்பர் போலும் 

  நனிபள்ளி அடிக ளாரே.  6 

 

 

அரவத்தால் வரையைச் சுற்றி 

  அமரரோ டசுரர் கூடி

அரவித்துக் கடையத் தோன்றும் 

  ஆலநஞ் சமுதா வுண்டார்

விரவித்தம் அடிய ராகி 

  வீடிலாத் தொண்டர் தம்மை

நரகத்தில் வீழ வொட்டார் 

  நனிபள்ளி அடிக ளாரே.  7 

 

 

மண்ணுளே திரியும் போது 

  வருவன பலவுங் குற்றம்

புண்ணுளே புரைபு ரையன் 

  புழுப்பொதி பொள்ள லாக்கை

----- ----- ----- -----

 

இப்பதிகத்தில் 8-ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் போயின.  8 

 

 

இப்பதிகத்தில் 9-ம்செய்யுள் மறைந்து போயிற்று.  9 

 

 

பத்துமோர் இரட்டி தோளான் 

  பாரித்து மலையெ டுக்கப்

பத்துமோர் இரட்டி தோள்கள் 

  படருடம் படர வூன்றிப்

பத்துவாய் கீதம் பாடப் 

  பரிந்தவற் கருள்கொ டுத்தார்

பத்தர்தாம் பரவி யேத்தும் 

  நனிபள்ளிப் பரம னாரே. 10

 

திருச்சிற்றம்பலம்