நான்காம்-திருமுறை

058 கன்றினார் புரங்கள்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : பருப்பதம்

திருச்சிற்றம்பலம்

 

கன்றினார் புரங்கள் மூன்றுங் 

  கனலெரி யாகச் சீறி

நின்றதோ ருருவந் தன்னால் 

  நீர்மையும் நிறையுங் கொண்டு

ஒன்றியாங் குமையுந் தாமும் 

  ஊர்பலி தேர்ந்து பின்னும்

பன்றிப்பின் வேட ராகிப் 

  பருப்பத நோக்கி னாரே.  1 

 

 

கற்றமா மறைகள் பாடிக் 

  கடைதொறும் பலியுந் தேர்வார்

வற்றலோர் தலைகை யேந்தி 

  வானவர் வணங்கி வாழ்த்த

முற்றவோர் சடையில் நீரை 

  ஏற்றமுக் கண்ணர் தம்மைப்

பற்றினார்க் கருள்கள் செய்து 

  பருப்பத நோக்கி னாரே.  2 

 

 

கரவிலா மனத்த ராகிக் 

  கைதொழு வார்கட் கென்றும்

இரவுனின் றெரிய தாடி 

  இன்னருள் செய்யும் எந்தை

மருவலார் புரங்கள் மூன்று 

  மாட்டிய நகைய ராகிப்

பரவுவார்க் கருள்கள் செய்து 

  பருப்பத நோக்கி னாரே.  3 

 

 

கட்டிட்ட தலைகை யேந்திக் 

  கனலெரி யாடிச் சீறிச்

சுட்டிட்ட நீறு பூசிச் 

  சுடுபிணக் காட ராகி

விட்டிட்ட வேட்கை யார்க்கு 

  வேறிருந் தருள்கள் செய்து

பட்டிட்ட வுடைய ராகிப் 

  பருப்பத நோக்கி னாரே.  4 

 

 

கையராய்க் கபால மேந்திக் 

  காமனைக் கண்ணாற் காய்ந்து

மெய்யராய் மேனி தன்மேல் 

  விளங்குவெண் ணீறு பூசி

உய்வரா யுள்கு வார்கட் 

  குவகைகள் பலவுஞ் செய்து

பையரா அரையி லார்த்துப் 

  பருப்பத நோக்கி னாரே.  5 

 

 

வேடராய் வெய்ய ராகி 

  வேழத்தி னுரிவை போர்த்து

ஓடரா யுலக மெல்லா 

  முழிதர்வர் உமையுந் தாமுங்

காடராய்க் கனல்கை யேந்திக் 

  கடியதோர் விடைமேற் கொண்டு

பாடராய்ப் பூதஞ் சூழப் 

  பருப்பத நோக்கி னாரே.  6 

 

 

மேகம்போல் மிடற்ற ராகி 

  வேழத்தி னுரிவை போர்த்து

ஏகம்பம் மேவி னார்தாம் 

  இமையவர் பரவி யேத்தக்

காகம்பர் கழற ராகிக் 

  கடியதோர் விடையொன் றேறிப்

பாகம்பெண் ணுருவ மானார் 

  பருப்பத நோக்கி னாரே.  7 

 

 

பேரிடர்ப் பிணிகள் தீர்க்கும் 

  பிஞ்ஞகன் எந்தை பெம்மான்

காருடைக் கண்ட ராகிக் 

  கபாலமோர் கையி லேந்திச்

சீருடைச் செங்கண் வெள்ளே 

  றேறிய செல்வர் நல்ல

பாரிடம் பாணி செய்யப் 

  பருப்பத நோக்கி னாரே.  8 

 

 

அங்கண்மா லுடைய ராய 

  ஐவரா லாட்டு ணாதே

உங்கள்மால் தீர வேண்டில் 

  உள்ளத்தா லுள்கி யேத்துஞ்

செங்கண்மால் பரவி யேத்திச் 

  சிவனென நின்ற செல்வர்

பைங்கண்வெள் ளேற தேறிப் 

  பருப்பத நோக்கி னாரே.  9 

 

 

அடல்விடை யூர்தி யாகி 

  அரக்கன்றோள் அடர வூன்றிக்

கடலிடை நஞ்ச முண்ட 

  கறையணி கண்ட னார்தாஞ்

சுடர்விடு மேனி தன்மேற் 

  சுண்ணவெண் ணீறு பூசிப்

படர்சடை மதியஞ் சேர்த்திப் 

  பருப்பத நோக்கி னாரே. 10

 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

வரகுண பாண்டியனின் பழியை ஒழித்தல்
View Details
ஆலவாயில் எல்லை வகுத்தல்
View Details
அஷ்டமா சித்தி உபதேசித்தல்
View Details